விவசாயிகள் மீது அக்கறை இல்லாத மோடி அரசு - சோனியாகாந்தி விமர்சனம்
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இன்னுயிர் நீத்த விவசாயிகளுக்கு மரியாதை செலுத்துமாறு சோனியாகாந்தி கேட்டுக்கொண்டார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி, மோடி அரசு மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இன்னுயிர் நீத்த விவசாயிகளுக்கு மரியாதை செலுத்துமாறு எம்.பிக்களை கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் சோனியாகாந்தி பேசியதாவது,
“வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இன்னுயிர் நீத்த விவசாயிகளுக்கு 700 விவசாயிகளுக்கும் மரியாதை செலுத்துவோம். நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை உயர்ந்துள்ளது, இது ஒவ்வொரு குடும்பத்திலும் மாதாந்திர பட்ஜெட்டை கடுமையாக பாதித்துள்ளது.
மோடி அரசு விவசாயிகள் மீதும் சாதாரண மக்கள் மீதும் அக்கறையற்ற தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.
எல்லை கள நிலவரம் மற்றும் அண்டை நாடுகளுடனான பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவதம் நடைபெற வேண்டும்.
நாகாலாந்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு குறித்த மத்திய அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை. இதுபோன்ற அசம்பாவிதங்கள் இனிமேலும் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகள அரசு எடுக்க வேண்டும்” என்பதை வலியுறுத்தினார்.
மேலும், “நாடாளுமன்றத்தில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது முன்னெப்போதும் இல்லாத கடுமையான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை” என்று சோனியா காந்தி கடுமையான விமர்சனங்களை மோடி அரசு மீது வைத்துள்ளார்.
விவசாயிகள் பிரச்சினைகள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள், மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சோனியாகாந்தி இன்று விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசி உள்ளார்.
முன்னதாக ராகுல் காந்தி நேற்று தெரிவித்திருந்ததாவது, “உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. அவர்கள் குடும்பத்தாருக்கு வேலை வழங்கவில்லை. போராட்டம் நடத்திய விவசாயிகளின் மீதான போலீஸ் வழக்குகளை திரும்பப் பெறவில்லை. இவையனைத்தும் மிகப்பெரிய குற்றங்கள் ஆகும்” என்று கூறியிருந்தார்.
Related Tags :
Next Story