ரூ.9800 கோடி மதிப்பில் சரயு கால்வாய் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
பிரதமர் மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
லக்னோ,
பிரதமர் மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் பால்ராம்பூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பால்ராம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் சரயு கால்வாய் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
பால்ராம்பூர் தொகுதியின் கனவு திட்டமாக சரயு கால்வாய் திட்டம் உள்ளது. இந்த திட்டம் 1978ம் ஆண்டு தொடங்கப்பட்டு, பின் பல்வேறு காரணங்களால் தடைபட்டு வந்தது. பிரதம மந்திரியின் விவசாயிகள் நலம் மற்றும் மேம்பாடு எனும் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் இந்த திட்டம் இப்போது பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இந்த திட்டம் 2016ம் ஆண்டிலிருந்து பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சயீ யோஜனா திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு திட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூபாய் 9800 கோடி ஆகும். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இதற்காக ரூபாய் 4600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் கீழ் ககாரா, சரயு, ரப்தி, பங்கங்கா மற்றும் ரோகினி ஆகிய ஐந்து நதிகளை இணைக்கும் திட்டமும் அடங்கும். இதன்மூலம், நீர் ஆதாரங்களை உகந்த முறையில் பயன்படுத்த இந்த திட்டம் வழி வகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், பால்ராம்பூர் தொகுதியில் சுமார் 14 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும். மேலும், 6200 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 29 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். மேலும், கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் 9 மாவட்டங்கள் இந்த திட்டம் மூலம் பயனடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மிகவும் சிரமப்பட்டு வந்த விவசாயிகள், இந்த திட்டத்தின் மூலம் மிகுந்த பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story