என் மகன் வருண் சிங் போராளி, வெற்றிகரமாக மீண்டு வருவான்: கிருஷ்ண பிரதாப் சிங்
என் மகன் வருண் சிங் போராளி, வெற்றிகரமாக மீண்டு வருவான் என்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட வீரரின் தந்தை கூறினார்.
உயிருடன் மீட்கப்பட்ட ஒரே வீரர்
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே கடந்த 8-ந் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி என மொத்தம் 13 பேர் உயிரிழந்தது, உலகையே அதிரச்செய்துள்ளது. அதே நேரத்தில் இந்த விபத்தில் 42 வயதான விமானப்படையின் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் காயங்களுடன், உயிருடன் மீட்கப்பட்டு இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது அவர் பெங்களூரு ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 80 சதவீத தீக்காயங்களுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
தந்தை பார்த்தார்
அவரை அவரது தந்தையும், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியுமான கர்னல் கிருஷ்ண பிரதாப் சிங், பெங்களூரு ராணுவ ஆஸ்பத்திரிக்கு வந்து தொலைவில் இருந்து மகனைப் பார்த்துள்ளார்.
வருண் சிங்கின் தாயார் உமா சிங்கும், தம்பியும் ஆஸ்பத்திரியில் வருண் சிங்குடன் இருக்கிறார்கள்.
உடல் நிலையில் ஏற்ற இறக்கம்
இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில் வசித்து வருகிற கர்னல் கிருஷ்ண பிரதாப் சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தொலைபேசி வழியாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-
என் மகன் வருணின் உடல் நிலையில் நிறைய ஏற்ற இறக்கம் உள்ளது. அதை விவரித்து விட முடியாது.
அவனது உடல்நிலை ஒவ்வொரு மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்படி மணிக்கொருமுறை கண்காணித்து வருகிற நிலையில் எழுச்சியும், வீழ்ச்சியும் ஏற்பட்டு வருகிறது. நாம் அதைத் சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் சிறந்த கைகளிடம் இருக்கிறோம். அவன் சிறந்த கைகளிடம் இருக்கிறான்.
மீண்டு வருவான்
சிறப்பான மருத்துவ வசதி, சிறப்பான மருத்துவ நிபுணர்கள் அவனுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். ஒட்டுமொத்த தேசமும் அவனுக்காக பிரார்த்திக்கிறது. அவனைத் தெரியாத எவ்வளவோ பேர் என்னை சந்திக்க வருவதால் நான் உணர்வுமயமாக இருக்கிறேன். அவனைப் பார்க்க வேண்டும் என்று பெண்கள்கூட வருகிறார்கள். அத்தகைய அன்பும் பாசமும் அவனுக்கு கிடைத்திருக்கிறது. அவன் வெற்றிகரமாக வெளியே வருவான். அவன் ஒரு போராளி. அவன் கண்டிப்பாக மீண்டு வருவான். மீண்டு வருவான்.
இவ்வாறு அவர் நம்பிக்கையுடன் கூறினார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி ஒரு பெரிய தொழில்நுட்ப கோளாறால் தேஜாஸ் போர் விமானம் ஒன்று விபத்தை சந்திக்க இருந்ததை குரூப் கேப்டன் வருண் வெற்றிகரமாக தடுத்து விட்டார். இதற்காக அவருக்கு கடந்த ஆகஸ்டு மாதம் சவுர்ய சக்கரா விருது வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
Related Tags :
Next Story