உத்தரபிரதேசத்தில் ரூ.9,800 கோடியில் 5 நதிநீர் இணைப்பு திட்டம்


உத்தரபிரதேசத்தில் ரூ.9,800 கோடியில் 5 நதிநீர் இணைப்பு திட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2021 11:30 PM IST (Updated: 11 Dec 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் ரூ.9,800 கோடியில் 5 நதிகளை இணைக்கும் சரயு கால்வாய் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

29 லட்சம் விவசாயிகளுக்கு பயன்

உத்தரபிரதேசத்தின் பல்ராம்பூரில் 5 நதிகளை இணைக்கும் சரயு நதி கால்வாய் திட்டம் முடிக்கப்பட்டு உள்ளது. 1978-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் 40 ஆண்டுகளுக்குப்பின் அமலுக்கு வருகிறது.

ரூ.9,800 கோடியில் நிறைவேற்றப்படும் இந்த திட்டம் மூலம் 14 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், 29 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் எனவும் கூறப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அங்கே கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றும்போது அவர் கூறியதாவது:-

கிடப்பில் இருப்பதால் அதிர்ச்சி

இந்த நிகழ்ச்சிக்காக நான் டெல்லியில் இருந்து கிளம்பியபோது, இந்த திட்டத்தை ரிப்பன் வெட்டி ஆரம்பித்து விட்டார் என்று யாராவது சொல்வார்கள் என்று காத்திருந்தேன். ஏனெனில் இது சிலருடைய (அகிலேஷ் யாதவ்) பழக்கம்.

ரிப்பன் வெட்டுவதே அவர்களுக்கு முக்கியம், ஆனால் குறிப்பிட்ட நேரத்துக்குள் திட்டங்களை முடிப்பதே எங்களது நோக்கம். 2014-ல் நான் ஆட்சிக்கு வந்தபோது 99 நீர்ப்பாசன திட்டங்கள் பல ஆண்டுகளாக கிடப்பில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

இந்த சரயு கால்வாய் திட்டம் கூட தேவையில்லாமல் தாமதிக்கப்பட்டு வந்தது. நாட்டு மக்களின் பணம் தேவையில்லாமல் செலவழிப்பதும், வீணாவதும், நேரமும்-வளங்களும் வீணாவதும் மிகவும் வருத்தத்தை தருவது ஆகும்.

100 மடங்கு செலவு

இந்த சிந்தனையே நாட்டின் சமச்சீர் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. இந்த சிந்தனையே சரயு நதி நீர் திட்டத்தையும் முடக்கியது.

இந்த திட்டம் தொடங்கப்பட்டபோது ரூ.100 கோடிக்குள் இருந்தது. ஆனால் தற்போது இதன் செலவு சுமார் ரூ.10 ஆயிரம் கோடியாகி இருக்கிறது என்பதை அனைத்து குடிமக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இது நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணம் ஆகும். உங்களது ஒவ்வொரு ரூபாயும் தகுந்த நேரத்தில் செலவழிக்கப்பட வேண்டும். ஆனால் முந்தைய அரசுகளின் மெத்தனத்தால் 100 மடங்கு அதிக செலவு ஆகியிருக்கிறது. இவர்களை நீங்கள் தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

பிபின் ராவத்துக்கு புகழாரம்

முன்னதாக, சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

அவர் கூறும்போது, ‘ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த அனைத்து வீரர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் மரணம் ஒவ்வொரு இந்தியருக்கும் பேரிழப்பாகும்’ என்று கூறினார்.

ஜெனரல் பிபின் ராவத் எங்கிருந்தாலும், இந்தியா முன்னேறிச் செல்வதைக் காண்பார் எனக்கூறிய மோடி, எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், படைகளைத் தன்னிறைவுபடுத்துதல், முப்படைகளின் ஒருங்கிணைப்பு ஆகிய பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

இந்தியா வேதனையில் உள்ளது, ஆனால் நாங்கள் நிலைகுலையமாட்டோம் எனவும், நாம் ஒன்றாக இணைந்து கடினமாக உழைப்போம், ஒவ்வொரு உள் மற்றும் வெளிப்புற சவால்களை எதிர்கொண்டு, நாட்டை வலிமையாக்குவோம் எனறும் அவர் கூறினார்.


Next Story