கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்தப்படும்: முதல் மந்திரி சூசகம்


கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்தப்படும்: முதல் மந்திரி சூசகம்
x
தினத்தந்தி 12 Dec 2021 5:18 PM IST (Updated: 12 Dec 2021 5:18 PM IST)
t-max-icont-min-icon

ஆனால் மதமாற்ற தடை சட்டத்தை சட்டசபையில் தாக்கல் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஹுப்பளி,

கர்நாடக சட்டசபை ஆண்டுதோறும் 3 முறை கூடுகிறது. அதாவது பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத் தொடர் ஆகிய 3 சட்டசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பட்ஜெட் மற்றும் மழைக்கால கூட்டத்தொடர் பெங்களூருவில் உள்ள விதானசவுதாவில் நடத்தப்பட்டு வருகிறது.

அதுபோல் ஆண்டுதோறும் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சுவர்ண விதானசவுதாவில் நடத்தப்பட்டு வருகிறது.  அதன்படி, குளிர்கால கூட்டத்தொடருக்காக பெலகாவி சுவர்ண சவுதாவில், கர்நாடக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது. நாளை தொடங்கும் கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதாவது நாளை முதல் வருகிற 24-ந் தேதி வரை 10 நாட்கள் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை), 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சட்டசபை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெலகாவியில் நடைபெறும் கூட்டத்தொடரில் மதமாற்ற தடை சட்டம் உள்ளிட்ட சில சட்ட மசோதாக்களை தாக்கல் செய்யவும் அரசு முடிவு செய்திருக்கிறது. ஆனால் மதமாற்ற தடை சட்டத்தை சட்டசபையில் தாக்கல் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.  

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கூறியதாவது;-  மத மாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். சட்டத்துறை இந்த சட்டம் பற்றி ஆய்வு செய்துவருகிறது. ஆய்வுக்கு பின்னர் இந்த சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும்” எனத்தெரிவித்தார். 

Next Story