பாகிஸ்தானுக்கு எதிரான மறைமுக போரிலும் வெற்றி பெறுவோம்! -ராஜ்நாத்சிங் உறுதி


பாகிஸ்தானுக்கு எதிரான மறைமுக போரிலும் வெற்றி பெறுவோம்! -ராஜ்நாத்சிங் உறுதி
x
தினத்தந்தி 13 Dec 2021 8:38 AM IST (Updated: 13 Dec 2021 8:38 AM IST)
t-max-icont-min-icon

பொன்விழா கொண்டாட்டத்தை கோலாகலமாக கொண்டாட விரும்பினோம்.ஆனால், பிபின் ராவத்தின் எதிர்பாராத மரணத்தால் எளிமையாக கொண்டாடுகிறோம்.

புதுடெல்லி, 

1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரின் 50ம் ஆண்டு பொன்விழா எளிய முறையில் நேற்று நடைபெற்றது. இந்த போரில் பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம் தோற்கடித்த பொன் விழா கொண்டாட்டம் நேற்று தொடங்கியது. 

டெல்லி இந்தியா கேட் பகுதியில் இந்த கொண்டாட்டத்தை ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்து பேசியதாவது, 

“பொன்விழா கொண்டாட்டத்தை கோலாகலமாக கொண்டாட விரும்பினோம். ஆனால், பிபின் ராவத்தின் எதிர்பாராத மரணத்தால் எளிமையாக கொண்டாடுகிறோம். இந்த கொண்டாட்டம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து பிபின் ராவத் என்னுடன் ஆலோசனை நடத்தி வந்தார். அவரை இழந்தது வேதனை அளிக்கிறது.

உயிர் பிழைத்த விமானப்படை அதிகாரி வருண் சிங் பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரையும், அவருடைய தந்தையையும் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறேன்.

1971-ம் ஆண்டு போர், பாகிஸ்தான் ராணுவத்தை மட்டுமின்றி, அநீதி, அராஜகம் ஆகியவற்றையும் தோற்கடித்த போர். மதத்தின் அடிப்படையில் இந்தியா பிரிவினையை சந்தித்தது ‘வரலாற்று தவறு’ என்பதை நிரூபித்த போர்.

ஒரே மதம் என்ற அடிப்படையில்தான் பாகிஸ்தான் பிரிந்து சென்றது. ஆனாலும், அது ஒரே நாடாக இருக்க முடியவில்லை. வங்காள தேசம் உருவானது. அதன் வளர்ச்சிக்கு இந்தியா உதவியாக இருந்தது.

மறைமுக போர்:-

இந்தியா எந்த நாட்டின் மீதும் போர் தொடுத்தது இல்லை. மற்ற நாட்டின் ஒரு அங்குல நிலத்தைக் கூட ஆக்கிரமித்தது இல்லை.

ஆனால், 1971 போருக்கு பிறகு, இந்தியாவுக்கு எதிராக மறைமுக போரில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. நேரடி போரில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது. அதுபோல், பாகிஸ்தான் தூண்டி விடும் பயங்கரவாதத்துக்கு எதிரான மறைமுக போரிலும் இந்தியா வெற்றி பெறும்.

இந்தியாவுக்கு எதிரான வெறுப்பு, பாகிஸ்தான் மனதில் ஆழ வேரூன்றி இருக்கிறது. பாகிஸ்தான் தனது ஏவுகணைகளுக்கு சூட்டிய பெயர்களில் இருந்தே இதை அறியலாம். கவ்ரி, காஸ்னவி, அப்தாலி என்று இந்தியா மீது படையெடுத்தவர்கள் பெயர்களையே சூட்டியுள்ளது.

இவர்கள் தற்போதைய பாகிஸ்தான் நிலப்பரப்பு மீதும் படையெடுத்தவர்கள் என்பதை நினைவூட்டுகிறேன்.”

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story