அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல்: மத்திய அரசு தகவல்


அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல்: மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 13 Dec 2021 9:46 AM IST (Updated: 13 Dec 2021 9:46 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டுக்கு 4 தகுதி ஏற்படுத்தும் நாட்களை உருவாக்கி, வாக்காளர் பட்டியலை 4 தடவை புதுப்பிப்பதன்மூலம் அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் அமலுக்கு வரும்.

புதுடெல்லி,

ஆண்டுதோறும் புதிய வாக்காளர் சேர்ப்புக்கு ஜனவரி 1-ந் தேதி, தகுதி ஏற்படுத்தும் நாளாக (கட் ஆப்) உள்ளது. அதாவது, அந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியோ அல்லது அதற்கு முன்போ 18 வயது பூர்த்தியானவர்கள் மட்டுமே அந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.

இதனால், அந்த ஆண்டு ஜனவரி 2-ந் தேதி 18 வயது பூர்த்தியானவர்கள் கூட அந்த ஆண்டு வாக்காளராக சேர முடியாது. அவர்கள் ஒரு வருடம் காத்திருந்து, அடுத்த ஆண்டுதான் வாக்காளராக சேர முடியும்.இதன் காரணமாக, தகுதியான ஏராளமான இளைஞர்கள் அதே ஆண்டில் வாக்காளர் பட்டியலில் சேர முடியவில்லை.

ஆகவே, ஆண்டுக்கு 4 தகுதி ஏற்படுத்தும் நாட்களை நிர்ணயிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் வற்புறுத்தி வருகிறது. இந்தநிலையில், இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சகம் கூறியிருப்பதாவது:-

‘ஆண்டுக்கு 4 தகுதி ஏற்படுத்தும் நாட்களை உருவாக்கி, அதிகமான வாக்காளர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 என 4 நாட்கள் உருவாக்கப்படும். இதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 14(பி) பிரிவில் திருத்தம் செய்யப்படும்.

இந்த திட்டம் உள்பட, தேர்தல் கமிஷனின் இதர சீர்திருத்தங்கள் அடங்கிய விரிவான மந்திரிசபை குறிப்பு தயாராகி வருகிறது.

நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களுக்கு ஒரே வாக்காளர் பட்டியல் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், உள்ளாட்சி தேர்தலுக்கு அந்தந்த மாநிலங்கள் தனி வாக்காளர் பட்டியலை பின்பற்றி வருகின்றன. ஒரே ஒரு தகுதி ஏற்படுத்தும் நாள் இருப்பதுதான் இதற்கு காரணம்.

எனவே, 4 தகுதி ஏற்படுத்தும் நாட்களை உருவாக்கி, வாக்காளர் பட்டியலை 4 தடவை புதுப்பித்தால், உள்ளாட்சி தேர்தலுக்கும் மாநிலங்கள் இந்த பட்டியலை பயன்படுத்த வாய்ப்புள்ளது. அதன்மூலம் அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் அமலுக்கு வரும்.’

இவ்வாறு மத்திய சட்ட அமைச்சகம் கூறியுள்ளது.

Next Story