நடிகை ஜாக்குலின்- சகோதரி, குடும்பத்தினருக்கு கோடி கோடியாக பரிசளித்த சுகேஷ் சந்திரசேகர்..!!


நடிகை ஜாக்குலின்- சகோதரி, குடும்பத்தினருக்கு கோடி கோடியாக பரிசளித்த சுகேஷ் சந்திரசேகர்..!!
x
தினத்தந்தி 13 Dec 2021 6:49 PM IST (Updated: 13 Dec 2021 6:49 PM IST)
t-max-icont-min-icon

நடிகை ஜாக்குலின் மற்றும் சகோதரி, குடும்பத்தினருக்கு சுகேஷ் சந்திரசேகர் கோடி கோடியாக பரிசளித்தார்.

மும்பை,

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர், அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்பு இருப்பதாக கூறி தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலரை ஏமாற்றி பணம் மோசடி செய்து இருப்பதாக புகார்கள் உள்ளன. 

கடந்த 2017-ம் ஆண்டு அ.தி.மு.க. பிளவுப்பட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி. தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறி டெல்லி குற்றவியல் போலீசார் டி.டி.வி.தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுன், தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தனர்.

பலரிடம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்திருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரின் பெங்களூரு, சென்னை பங்களாக்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், கணக்கில் வராத 2 கிலோ தங்கம், 82 லட்சம் ரொக்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவருடைய பங்களாவுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதற்கிடையில், சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, சுகேஷ் மீது டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதில் அவர் காதலி லீனா மரியாபாலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தனர். மேலும் இந்த வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சாட்சியமாக சேர்க்கப்பட்டார். அவரிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. 

இந்த வழக்கில் அமலாக்க துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது. அதில் சுகேஷ் சந்திர சேகர்  தன்னை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் "சேகர் ரத்னா வேலா" என்று அறிமுகப்படுத்தியதாகக் கூறி உள்ளது. மேலும்  குற்றப்பத்திரிகையில் கூறி இருப்பதாவது:-

சுகேஷ் முதலில் டிசம்பர் 2020 மற்றும் ஜனவரி 2021 இல் அவளை தொடர்பு கொள்ள முயன்றார், ஆனால் அவர் யார் என்று தெரியாததால்  ஜாக்குலின் அவரது அழைப்புகளுக்கு  பதிலளிக்கவில்லை. பின்னர் சுகேஷ் சந்திரசேகர் தனது ஒப்பனை கலைஞரான ஷான் முத்தத்தின் மூலம் நடிகையுடன்  தொடர்பு கொண்டார்.

ஒப்பனை கலைஞர் நடிகர் சேகர் ரத்ன வேலாவை 'மிக முக்கியமான நபராக'  கூறி அவரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளார் என கூறப்பட்டு உள்ளது.

ஜாக்குலின் பெர்னாண்டஸ், அமலாக்கத்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில், சுகேஷ் சந்திரசேகர் தனக்கு இரண்டு ஜோடி வைர கம்மல்கள், இரண்டு ஹெர்ம்ஸ் வளையல்கள் மற்றும் மூன்று பர்கின் பைகள் மற்றும் ஒரு ஜோடி லூயிஸ் உய்ட்டன் ஷூக்களை கொடுத்ததாக கூறி  உள்ளார்.

ஆனால் சுகேஷ் சந்திரசேகர், 15 ஜோடி காதணிகள், ஐந்து பர்கின் பைகள் மற்றும் பல  ஆடம்பர பொருட்களை நடிகைக்கு கொடுத்ததாக கூறியுள்ளார். ஜாக்குலின் பெர்னாண்டஸ் கார்டியர் வளையல்கள் மற்றும் மோதிரங்கள் மற்றும் ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள், விலைமதிப்பு மிக்க வளையல்களையும் பரிசளித்ததாக கூறி உள்ளார்.

சுகேஷ் சந்திரசேகர், வாக்குமூலத்தில், ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் கொடுத்ததாகக் கூறி உள்ளார்.

மேலும், சுகேஷ் சந்திரசேகர், அமெரிக்காவில் வசிக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸின் சகோதரிக்கு 150,000 அமெரிக்க டாலர் கடனாக வழங்கியுள்ளார். அவருக்கு பி எம் டபிள்யூ எக்ஸ் 5 காரையும் கொடுத்து உள்ளார்.

ஜாக்குலின் பெர்னாண்டசின் பெற்றோருக்கு மஸராட்டி கார்  மற்றும் பஹ்ரைனில் உள்ள அவரது தாயாருக்கு போர்ஷை காரை  பரிசாக அளித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது சகோதரருக்கு 50,000 அமெரிக்க டாலர் கடனாகவும் வழங்கி உள்ளார்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ், சுகேஷ் சந்திரசேகர் தன்னை தமிழகத்தை சேர்ந்த முன்னணி தனியார் தொலைக்காட்சி உரிமையாளர் என்று அறிமுகப்படுத்தியதாக கூறினார். மேலும், தமிழக முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த  ஜெயலலிதாவின் குடும்பத்தை சேர்ந்தவன் என கூறி உள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story