குஜராத்தில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான்..! இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 41-ஆக உயர்வு


குஜராத்தில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான்..! இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 41-ஆக உயர்வு
x
தினத்தந்தி 14 Dec 2021 10:35 AM IST (Updated: 14 Dec 2021 11:47 AM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நாட்டின் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு 41-ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது இந்தியா உள்பட 59 நாடுகளுக்கு பரவி உள்ளது.  மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்படுகிறது. 

இந்தியாவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு பெங்களூருவில் கண்டறியப்பட்டது. அங்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க நாட்டவர் மற்றும் ஒரு மருத்துவர் உட்பட இரண்டு பேருக்கு முதன்முதலாக ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்படது.

இந்நிலையில் குஜராத்தில் மேலும் ஒருருக்கு ‘ஒமைக்ரான்’ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து குஜராத் திரும்பிய 42 வயது நபர் ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். 

புதிய பாதிப்புகளுடன், ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை குஜராத்தில் 4 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

இதன்படி இந்தியாவில் ஒமைக்ரான் வைரசின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. ( மராட்டியம் - 20,  குஜராத் - 4, ராஜஸ்தான் - 9, டெல்லி - 2, ஆந்திரா -1, கர்நாடகா - 3  சண்டிகர் - 1, கேரளா - 1 ).


தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக  டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ந் தேதிகளில் கடற்கரைகளில் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட தடை விதித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அதேபோல, கேரளாவில் ஒமைக்ரான் பாதிப்புடையவருடன் விமானத்தில் பயணித்த 36 பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர் என்று அம்மாநில முதவர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

இவ்வாறு பல்வேறு மாநிலங்களிலும்  ஒமைக்ரான் தொற்று பரவலை  தடுக்கும் விதமாக கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story