முற்றுகை போராட்டத்தால் வன்முறை; போலீசார் உள்பட 13 பேர் படுகாயம்
முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட வன்முறையில் போலீசார் உள்பட 13 பேர் படுகாயம்.நாளை மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அழைப்பு விடுத்து உள்ளது.
மங்களூரு :
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் புத்தூர் தாலுகா உப்பினங்கடி பழைய கேட் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சமூக ஆர்வலர் ஒருவர் மீதும், அங்குள்ள கடைகள் மீதும் நடந்த தாக்குதல் சம்பந்தமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க கோரி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் உப்பினங்கடி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கு மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு போலீஸ் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தபோது போலீசார் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
உப்பினங்கடி போலீஸ் கான்ஸ்டபிள் ரேணுகா, புதூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரண்குமார் உள்ளிட்டோர் காயமடைந்து மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது அங்கு பதட்டமான சூழ்நிலை உள்ளதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் கலவரம், போலீஸ் தடியடி சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் நசீர்பாஷா கூறியதாவது;-
“பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உறுப்பினர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினார். ஆனால் போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். எங்கள் உறுப்பினர்கள் நியாயமற்ற முறையில் கைது செய்யப்பட்டனர். காவல்துறையின் அத்துமீறலைக் கண்டித்து புதன்கிழமை மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கபட்டு உள்ளது” என கூறினார்.
Related Tags :
Next Story