வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் இல்ல விழாவை சிறப்பித்த சக வீரர்கள்


வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் இல்ல விழாவை சிறப்பித்த சக வீரர்கள்
x

மணப்பெண்ணை மணமேடைக்கு அழைத்து வருவது முதல் அனைத்து திருமண சடங்குகளையும் சக சிஆர்பிஎப் வீரர்கள் செய்தனர்.

புதுடெல்லி

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த நண்பரின் வீட்டுத் திருமணத்தை பொறுப்புடன் நடத்தி முடித்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

கடந்த ஆண்டு காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சைலேந்திர பிரதாப் சிங் என்ற 110 பட்டாலியனைச் சேர்ந்த கேப்டன் வீர மரணமடைந்தார். அவரது சகோதரி ஜோதியின் திருமணம் நேற்று உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றது.

அந்தத் திருமணத்தை மறைந்த வீரர் சைலேந்திர பிரதாப் சிங்கின் நண்பர்கள் சகோதரர்கள் இடத்தில் இருந்து நடத்தி வைத்தனர்.

டுவிட்டரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை  பகிர்ந்த திருமண புகைப்படம் வைரலாகி வருகிறது.

புகைப்படத்துடன் பகிரப்பட்ட டுவீட்டில், "மத்திய ரிசர்வ் போலீஸ் படை  110 பட்டாலியனைச் சேர்ந்த கேப்டன் சைலேந்திர பிரதாப் சிங் மறைந்திருக்கலாம். ஆனால் அவரை நாங்கள் யாரும் மறைக்கவில்லை. பிரதாப் சிங் மறைந்தார், மறக்கப்படவில்லை. அதனால் தான் இன்று ஜோதியின் திருமணத்தை நடத்துகிறோம்" என்று பதிவிடப்பட்டிருந்தது.

இது குறித்து சைலேந்திர பிரதாப் சிங்கின் தந்தை கூறும் போது ,"என் மகன் இப்போது இந்த உலகில் இல்லை, ஆனால் இப்போது சிஆர்பிஎப் வீரர்களின் வடிவத்தில் எங்களுக்கு நிறைய மகன்கள் உள்ளனர், அவர்கள் மகிழ்ச்சி மற்றும் துக்கத்தின் போது எப்போதும் எங்களுடன் நிற்கிறார்கள்" என தெரிவித்தார் .

Next Story