1971ம் ஆண்டு போரின் பொன்விழா கொண்டாட்டம் - பிரதமர் வாழ்த்து!


1971ம் ஆண்டு போரின் பொன்விழா கொண்டாட்டம் - பிரதமர் வாழ்த்து!
x
தினத்தந்தி 16 Dec 2021 10:52 AM IST (Updated: 16 Dec 2021 10:58 AM IST)
t-max-icont-min-icon

1971ம் ஆண்டு ஏற்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி அடைந்ததை நினைவுகூறும் 50ம் ஆண்டு பொன்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

புதுடெல்லி,

1971ம் ஆண்டு ஏற்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி அடைந்ததை நினைவு கூறும் விதமாக  ஒவ்வொரு ஆண்டும்  டிசம்பர் மாதம் 16ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த போரில் அடைந்த வெற்றிக்கு பின் கிழக்கு பாகிஸ்தானாக இருந்துவந்த தற்போதைய வங்காள தேசம் தனி நாடாக உருவானது. 

வங்காளதேசம் உதயமான 50-வது ஆண்டு கொண்டாட்டம்  டாக்கா நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வரும்படி இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வங்காளதேசம் அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. 

அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் வங்காளதேசம் புறப்பட்டார். அந்நாட்டின் 50-வது போர் வெற்றி நாள் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  கலந்துகொள்கிறார்.

இந்த ஆண்டு  இந்திய வெற்றியின் (விஜய் திவாசின்)  50ம் ஆண்டு பொன்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த பொன்விழா குறித்து வாழ்த்துக்களை தெரிவித்திருக்கும் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது,

‘இந்திய ராணுவ வீரர்களின் அளப்பரிய வீரத்தையும் தியாகத்தையும் நினைவு கூறுகிறேன். 

நாம் அனைவரும் ஒன்றிணைந்து அடக்குமுறை சக்திகளை தோற்கடித்தோம்.

டாக்காவில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி கலந்து கொண்டிருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் சிறப்பான தருணம் ஆகும்’ என்று தெரிவித்துள்ளார். 


கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி தேசிய போர் நினைவிடத்தில் 4  தீபச்சுடர்களை ஏற்றி வைத்தார். அதன்பின் அந்த 4 தீபச்சுடர்களும்  கன்னியாகுமரி, சியாச்சென், அகார்தலா, கட்ச் வளைகுடா, அந்தமான் தீவுகள் உள்பட இந்தியாவின் அனைத்து திசைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன. அந்த போரில் பங்கேற்ற வீரர்களின் இல்லங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்று அந்த 4  தீபச்சுடர்களும் பிரதமரால் ஒன்றிணைக்கப்பட்டு தேசிய போர் நினைவிடத்தில் சுடர் விட்டுக் கொண்டிருக்கும் நித்திய சுடரில் ஐக்கியமாக்கப்படும். 

Next Story