மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 10 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்கள் - அதிர்ச்சி தகவல்


மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 10 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்கள் - அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 16 Dec 2021 8:25 AM GMT (Updated: 16 Dec 2021 8:25 AM GMT)

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் 10 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளதாக மத்திய கல்வித்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் எத்தனை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன? என மாநிலங்களவையில் உறுப்பினர் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதில், மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் முழு நேர ஆசிரியர் பணிக்கு 6 ஆயிரத்து 535 இடங்கள் காலியாக உள்ளன. அதேபோல், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில் (ஐஐஎம்) 403 ஆசிரியர் பணி இடங்களும், இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (ஐஐடி) 3 ஆயிரத்து 876 ஆசிரியர் பணி இடங்களும் காலியாக உள்ளன. 

இதன் மூலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் மொத்தம் 10 ஆயிரத்து 814 ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளன.

இந்நிலையில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதற்கு முன்னாள் மத்திய நிதி-மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஆண்டு இறுதியில் மோடி அரசின் மற்றொரு பரிசு. மத்திய பல்கலைக்கழங்கள், ஐடிடி- கள், ஐஐஎம்-களில் மொத்தம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 

இவற்றில் 4 ஆயிரத்து 126 ஆசிரியர் பணியிடங்கள் எஸ்சி, எஸ்டி, ஒபிசி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. ஆசிரியர்கள் மூலம் கற்பிப்பதே அவர்களின் முதன்மை நோக்கம் என்று நாங்கள் நினைத்தோம். போதிய ஆசிரியர்கள் இல்லாமல் இந்த நிறுவனங்கள் என்ன செய்கின்றன என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.

Next Story