‘விஷம் கொடுத்து என்னை கொல்ல முயற்சி' - சரிதா நாயர் பரபரப்பு குற்றச்சாட்டு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 17 Dec 2021 2:31 AM IST (Updated: 17 Dec 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

விஷம் கொடுத்து தன்னை கொல்ல முயற்சி நடந்ததாக சோலார் பேனல் மோசடி புகாரில் சிக்கிய சரிதா நாயர் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

திருவனந்தபுரம், 

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன. மேலும் இவர் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, அப்போதைய அமைச்சர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு கொட்டாரக்கரை அருகே காரில் சரிதா நாயர் சென்றார். அப்போது, நள்ளிரவில் ஒரு கும்பல் அவரை வழிமறித்து காரை அடித்து நொறுக்கியது. பின்னர் அவரையும் தாக்க முயன்ற வழக்கு கொட்டாரக்கரை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக சரிதாநாயர் நேற்று நீதிமன்றம் வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி நடந்தது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு நான் தற்போது வேலூர் மற்றும் திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வருகிறேன். உடல் நலம் தேறியதும் எனக்கு விஷம் கொடுத்தது யார்? என்பதை வெளியிடுவேன்” என்று அவர் கூறினார்.

இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story