பி.எஸ்.எல்.வி. மூலம் 34 நாடுகளின் 342 செயற்கைகோள்கள் ஏவப்பட்டு உள்ளன: மத்திய அரசு தகவல்
பி.எஸ்.எல்.வி. மூலம் 34 நாடுகளின் 342 செயற்கைகோள்கள் ஏவப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
தி.மு.க.வை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மாநிலங்களவையில் எழுப்பிய செயற்கைகோள்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய அறிவியல் தொழில்நுட்பம், அணுசக்தி, பிரதமர் அலுவலகம் மற்றும் விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று எழுத்துபூர்வமாக பதில் அளித்தார்.
அதில், “1999-ம் ஆண்டுமுதல் இதுவரை 34 நாடுகளின் 342 செயற்கைகோள்கள் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் வணிக ரீதியில் ஏவப்பட்டு உள்ளன. இதன்மூலம் கடந்த 2019-2021 வரையிலான 3 ஆண்டுகளில் அன்னிய செலாவணியாக ரூ.353 கோடி வருமானம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இந்த வகை வெளிநாட்டு செயற்கைகோள்கள் புவி கண்காணிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சோதனைகளுக்காக இந்திய ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. 34 நாடுகளில் அமெரிக்காவுக்காக 226 செயற்கைகோள்களும், இங்கிலாந்து மற்றும் கனடாவுக்காக தலா 12 செயற்கைகோள்களும் அதிகபட்சமாக ஏவப்பட்டு உள்ளன” என்று கூறப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக மற்றொரு உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதிலில், “2021 முதல் 2023-ம் ஆண்டு வரை வெளிநாட்டு செயற்கைகோள்களை விண்ணில் அனுப்ப 4 நாடுகளுடன் 6 ஒப்பந்தங்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) கையெழுத்திட்டு உள்ளது. வெளிநாட்டு செயற்கைகோள்களை இஸ்ரோவின் வணிகப்பிரிவான ‘நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்’ வணிக ரீதியில் அனுப்பி வருகிறது” என்று பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story