ஒமைக்ரான் பரவும் வேகம் அதிகம்; ஆனால் நுரையீரலை பாதிக்காது- ஆய்வாளர்கள் தகவல்
கொரோனாவால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், தடுப்பூசி போடப்பட்டவர்களிடமும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.
புதுடெல்லி
இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்வர்கள் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்து உள்ளது. மராட்டியம் - 32, ராஜஸ்தான் - 17, டெல்லி - 20, குஜராத் - 5, ஆந்திரா - 1, சண்டிகர் - 1, கேரளா - 5, கர்நாடகா - 8, தமிழ்நாடு - 1, தெலங்கானா - 7 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் இருந்துவரும் தகவலின்படி, ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவும் எனத் தெரியவந்துள்ளது. சமீபத்திய ஆய்வுகளின்படி, ஒமைக்ரானுக்கு எதிராக உற்பத்தி செய்யப்படும் நோய் எதிர்ப்பு சக்தி முந்தைய வைரஸ் வகைகளைவிட 20-40 மடங்கு குறைவாக இருப்பதாக கூறப்டுகின்றன. ஆனால், கொரோனாவால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், தடுப்பூசி போடப்பட்டவர்களிடமும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.
இங்கிலாந்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் உயிரிழந்துள்ளார். நாள்தோறும் இங்கிலாந்தில் நோய்த்தொற்று 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
சிஎஸ்ஐஆர்-ஐஜிஐபி அமைப்பின் இயக்குநர் அனுராக் அகர்வால் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “சார்ஸ் கோவிட் குறித்த எங்கள் ஆய்வில் சுவாரஸ்யமான திருப்புமுனை கிடைத்துள்ளது. அதாவது டெல்டா வைரஸ், உண்மையான சார்ஸ் கோவிட்டை விட, ஒமைக்ரான் ஏற்படுத்தும் பாதிப்பு குறைவுதான். ஆனால், காற்றில் பரவுவதும், பிரதி எடுப்பதும் வேகமாக இருக்கும். நுரையீரலின் மேல்சுவாசப் பகுதியைத்தான் பாதிக்கும் என்பதால், சாதாரண ஜலதோஷம், நிமோனியா இருக்கும். இருப்பினும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் இன்னும் அதிகமாகவே இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மனிதர்களின் நுரையீரலில் இருந்து நுரையீரல் திசுக்களைப் பிரித்தெடுத்து அதில் ஒமைக்ரான் உருமாற்றத்தை மட்டும் ஆய்வாளர்கள் பிரித்தெடுத்துள்னர். டெல்டா வைரஸிலிருந்து, ஒமைக்ரான் வைரஸ் எவ்வாறு மாறுபட்டது, எந்த அளவு பாதிப்பைத் தருகிறது, தரவில்லை என்பது குறித்து ஆராய்ந்துள்ளனர்.
அதில் டெல்டா வைரஸை விடவும், உண்மையான சார்ஸ் கோவிட்டை விட பிரதி எடுப்பதில் 70 மடங்கு வேகமாக ஒமைக்ரான் செயல்படுகிறது. ஆனால், நுரையீரல் திசுக்களைப் பிரதியெடுப்பதில் சார்ஸ் கோவிட்டை விட 10 மடங்கு குறைவாகவே இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாகவே நுரையீரலை ஒமைக்ரான் உடனடியாக பாதிக்காது என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்
ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரத்துறையின் இணைப் பேராசிரியர் மருத்துவர் மைக்கேல் சான் சீ-வாய் கூறியதாவது:-
ஒமைக்ரான், டெல்டா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபின் மனிதர்களால் எளிதாக சுவாசிக்க முடியாததற்கு காரணங்கள் உண்டு. வைரஸ் தன்னைப் பிரதி எடுப்பதில் மட்டும் நோயின் தீவிரம் தீர்மானிக்கப்படுவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தியின் அளவைப் பொறுத்தும் அமைகிறது.
ஒமைக்ரான் வைரஸ் குறைவான சக்தியுடைய கிருமியாக இருந்தாலும், அதிகமான மக்களை பாதிக்கும்போது, நோயின் தீவிரம் அதிகமாகி, உயிரிழப்பையும் அதிகரிக்க வைக்கும். எங்களின் ஆய்வில் ஒமைக்ரான் வைரஸ், தடுப்பூசி அளிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கிறது. ஏற்கெனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்திருந்தாலும் அதிலிருந்து தப்பிக்கிறது எனத் தெரியவந்துள்ளது. ஒமைக்ரான் வைரஸால் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த அச்சுறுத்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது” என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story