கர்நாடகத்தில் மதமாற்ற தடை சட்டம்; சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி - சித்தராமையா குற்றச்சாட்டு
கர்நாடகத்தில் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வருவதின் பின்னணியில் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி நடப்பதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக அரசு மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வருகிறது. இதற்கான மசோதாவை வருகிற 20-ந் தேதி சட்டசபையில் அரசு தாக்கல் செய்கிறது. இதற்கு கிறிஸ்தவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு நேற்று தர்ணா போராட்டத்தை பெலகாவியில் நடத்தியது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது;-
“கர்நாடக அரசு மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளதன் பின்னணியில் மக்களின் நலன் இல்லை. சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பது தான் இந்த சட்டத்தின் நோக்கம். அரசியல் சாசனப்படி நமது மக்கள், விரும்பிய மதத்தை பின்பற்ற முடியும். அரசியல் சாசனத்தில் அனைத்து மதத்தினருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
கிறிஸ்தவ சமுதாயம், கல்வி மற்றும் சுகாதாரத்தில் சிறப்பான சேவைகளை ஆற்றி வருகிறது. அவர்கள் நடத்தும் கல்வி நிலையங்களுக்கு செல்லும் அனைத்து குழந்தைகளும் மதமாற்றம் அடைவது இல்லை. விருப்பம் உள்ளவர்கள் மதம் மாறலாம். யாரையும் அவர்கள் கட்டாயப்படுத்துவது இல்லை.
அரசியல் சாசனத்தால் நல்லது நடக்க வேண்டுமென்றால் ஆட்சி அதிகாரம் நல்லவர்களின் கைகளில் இருக்க வேண்டும். கர்நாடகத்தில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது இத்தகைய தாக்குதல் நடக்கவில்லை.”
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
Related Tags :
Next Story