விசாரணை முடியும்வரை அவசரப்பட்டு எதுவும் கூறமாட்டேன்: விமானப்படை தளபதி


விசாரணை முடியும்வரை அவசரப்பட்டு எதுவும் கூறமாட்டேன்: விமானப்படை தளபதி
x
தினத்தந்தி 18 Dec 2021 10:36 PM IST (Updated: 18 Dec 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே நடந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி உள்பட 14 பேர் பலியானது தொடர்பான முப்படை விசாரணைக்குழுவின் விசாரணை நடந்து முடியும் வரை அவசரப்பட்டு எதுவும் கூறமாட்டேன் என்று விமானப்படை தளபதி விவேக்ராம் சவுத்ரி கூறினார்.

ஹெலிகாப்டர் விபத்து

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே கடந்த 8-ந்தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத்தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 12 அதிகாரிகள் என 14 பேர் பலியானது உலகையே உலுக்கி உள்ளது.

இந்த சம்பவம் நடந்த மறுநாளில் நாடாளுமன்றத்தில் அறிக்கை அளித்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது, இந்த சம்பவம் தொடர்பாக ஏர்மார்ஷல் மனவேந்திரசிங் தலைமையில் முப்படைகளின் விசாரணைக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, விசாரணை தொடங்கி உள்ளதாக அறிவித்தார்.

அதன்படி இந்த விபத்து குறித்து முப்படைகளின் விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.

இது ஒரு முழுமையான செயல்முறை....

இந்த சூழலில் ஐதராபாத் அருகே துண்டிக்கல் என்ற இடத்தில் உள்ள விமானப்படை அகாடமியில் நேற்று ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட விமானப்படை தளபதி விவேக்ராம் சவுத்ரி, அதற்கு மத்தியில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணை பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் விரிவாக பதில் அளித்து கூறியதாவது:-

குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக முப்படைகளின் விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை நடந்து முடிவதற்கு இன்னும் சில வாரங்கள் ஆகும். விசாரணைக்குழுவின் எந்தவொரு கண்டுபிடிப்பையும் நானும் முன்கூட்டியே தடுக்க விரும்பவில்லை. ஏனென்றால் இது ஒரு முழுமையான செயல்முறை ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடத்தி, என்ன தவறு நடந்துள்ளது என்பதை ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்து சரியான பரிந்துரைகள் மற்றும் கண்டுபிடிப்புகளுடன் வர வேண்டும் என்பதுதான் இந்த முப்படை விசாரணைக்குழுவின் அதிகாரிக்கு (ஏர் மார்ஷல் மனவேந்திர சிங்) பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு ஆகும்.

அவசரப்படமாட்டேன்...

இந்த விபத்துக்கு காரணம் என்னவாக இருக்கும், இதற்கான தீர்வு நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் நான் அவசரப்பட்டு செய்யமாட்டேன். எனவே இந்த விசாரணை நடந்து முடியும் காலம்வரை இன்னும் சில வாரங்கள் நாம் காத்திருப்போம். இது மிகவும் நியாயமான செயல்முறை. ஒட்டுமொத்த விசாரணையும் நியாயமாக நடைபெறும் என்பதை நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

போரின்தன்மையில் அடிப்படை மாற்றங்கள்

முன்னதாக ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி ஏர்மார்ஷல் விவேக்ராம் சவுத்ரி பேசுகையில், “தற்போது போரின் தன்மை அடிப்படை மாற்றங்களை சந்தித்து வருகிறது. புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் தீவிரமான புதிய கோட்பாடுகள் உருவாகி உள்ளன. இந்தியாவின் பாதுகாப்பு, பன்முக அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை உள்ளடக்கியது ஆகும். இதன் காரணமாக பல்வேறு திறன்களை உருவாக்குவதற்கும், அனைத்து செயல்பாடுகளையும் ஒரே நேரத்தில் குறுகிய கால எல்லைக்குள் செயல்படுத்தும் தேவை ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.


Next Story