சிவாஜி சிலை அவமதிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: உத்தவ் தாக்கரே


சிவாஜி சிலை அவமதிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 19 Dec 2021 12:42 AM IST (Updated: 19 Dec 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் சத்ரபதி சிவாஜி சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று முன்தினம் சத்ரபதி சிவாஜி மன்னர் சிலை அவமதிக்கப்பட்டது.

எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

இந்த விவகாரம் மராத்தியர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவாஜி சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து மராத்தியர்கள் அதிகம் வசிக்கும் கர்நாடக மாநிலம் பெலகாவியில் மராட்டிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறைக்கு திரும்பியது.

இதற்கிடையே கா்நாடக அரசுக்கு எதிராக மராட்டியத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சில இடங்களில் கர்நாடக மாநில முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் உருவ பொம்மையை எரித்தனர். இதேபோல பொது மக்கள் பல்வேறு பகுதிகளில் சத்ரபதி சிவாஜி மன்னரின் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து மரியாதை செய்தனர்.

மோடிக்கு உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

இதேபோல கர்நாடகத்தில் சிவாஜி சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

சிவாஜி மன்னர் மராட்டியம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசத்திற்கும் கடவுளாக உள்ளார். எனவே அவருக்கு அவமரியாதை இழைக்கப்படுவதை சகித்து கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

அடக்குமுறை

சிவாஜி சிலை அவமதிக்கப்பட்ட விஷயத்தை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. பல ஆண்டுகளாக கர்நாடகாவில் மராத்தி பேசும் மக்கள் அடக்குமுறைகளை சந்தித்து வருகின்றனர். தற்போது சிவாஜி சிலை அவமதிக்கப்பட்டுள்ளது.

வாரணாசியில் பேசிய பிரதமர் மோடி, எப்போது எல்லாம் இந்திய கலாசாரம் நசுக்கப்படுகிறதோ அப்போது எல்லாம் சத்ரபதி சிவாஜி மன்னர் போன்ற போராளி உதயமாகிவிடுகிறார் என்றார். அவர் இவ்வாறு பேசிய சில நாட்களில், பா.ஜனதா ஆட்சி செய்யும் கர்நாடகாவில் சத்ரபதி சிவாஜி சிலை தாக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு நடவடிக்கை எடுக்காமல் மராத்தி பேசும் மக்களின் குரலை நசுக்குகின்றனர். மராத்தி பேசும் மக்களுக்கு எதிரான கன்னடர் அடக்குமுறைகளில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மராத்தியர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதற்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். மத்திய அரசு இரட்டை நிலைப்பாட்டை நிறுத்தி கொண்டு இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கர்நாடக அரசு தான் பொறுப்பு

இதேபோல கர்நாடகாவில் மராத்தி பேசும் மக்கள் அதிகம் உள்ள இடங்களின் ஒருங்கிணைப்பு பொறுப்பை வகித்து வரும் மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், " சிவாஜி மன்னர் சிலை மீது மை பூசப்பட்ட விவகாரத்தை அடுத்து நடைபெறும் எதிர்வினைகளுக்கு கர்நாடக அரசு தான் பொறுப்பு. இது சிறிய சம்பவம் தான் என கூறிய கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் கருத்தும் கண்டனத்திற்கு உரியது" என்றார்.

இதேபோல மந்திரிகள் சகன்புஜ்பால், பாலாசாகிப் தோரட், திலீப்வால்சே பாட்டீல், ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட பலரும் கர்நாடகாவில் சிவாஜி சிலை அவமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.


Next Story