மந்திரிகள் தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து சிவசேனாவை அழிக்க பார்க்கிறார்கள்: ராம்தாஸ் கதம்
மந்திரிகள் அனில் பரப்பும், உதய் சாமந்தும் தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து சிவசேனாவை அழிக்க பார்ப்பதாக ராம்தாஸ் கதம் குற்றம்சாட்டி உள்ளார்.
இளம்தலைமுறைக்கு வழி
முந்தைய பா.ஜனதா - சிவசேனா கூட்டணி ஆட்சியில் 2014 முதல் 2019 வரை சுற்றுச்சூழல் துறை மந்திரியாக இருந்தவர் ராம்தாஸ் கதம். மூத்த தலைவரான இவருக்கு மகாவிகாஸ் கூட்டணி ஆட்சியில் மந்திரி பதவி வழங்கப்பட்டவில்லை. சமீபத்தில் மேல்-சபை உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் கூட ராம்தாஸ் கதமுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் நேற்று அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
2019-ல் மகாவிகாஸ் கூட்டணி அமைந்த போது, நான் தான் சுபாஷ் தேசாய், திவாகர் ராவ்தே, என் போன்ற மூத்த தலைவர்கள் இளம்தலைமுறையினருக்கு மந்திரி சபைக்கு வழிவிட வேண்டும் என பரிந்துரை செய்தேன். திவாகர் ராவ்தேவும், சுபாஷ் தேசாயும் இதை ஏற்றுக்கொண்டனர். ஆனால் சுபாஷ் தேசாயின் பெயர் மந்திரிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
சிவசேனாவை அழிக்க...
கட்சியை பலப்படுத்தவே அனில் பரப்பும், உதய் சாமந்தும் மந்திரியாக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ரத்னகிரியில் சிவசேனாவை அழிக்கப்பார்க்கிறார்கள். அனில் பரப்பிற்கு எதிராக பேசுவதால் நான் சிவசேனாவுக்கு எதிராக பேசுகிறேன் என்று அர்த்தம் இல்லை. அனில் பரப்பும், உதய் சாமந்தும் கட்சிக்காக வேர்வையும், ரத்தத்தையும் சிந்திய மூத்த தலைவர்களை முடிக்க மந்திரிகளாக ஆக்கப்படவில்லை. கொங்கன் மண்டலத்தில் சிவசேனா வலுவாக உள்ளது. ஆனால் 2 மந்திரிகளும் அங்கு கட்சியை இல்லாமல் செய்ய முயற்சி செய்கின்றனர்.
இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்த பிறகு முடிவு எடுப்பேன். கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் சிவசேனாவில் இருந்து நான் ஒருபோதும் விலக மாட்டேன். எப்போதும் சிவசேனா தொண்டனாகவே இருப்பேன். காவி கொடியை எப்போதும் விடமாட்டேன். அதற்காக பா.ஜனதாவில் சேர மாட்டேன். பா.ஜனதாவுக்கும், சிவசேனாவுக்கும் வேறுபாடு உள்ளது.
உத்தவ் தாக்கரேக்கு கடிதம்
கடந்த 2 ஆண்டுகளாக நான் மாதோஸ்ரீ செல்லவில்லை. எனினும் கட்சி விவகாரம் குறித்து உத்தவ் தாக்கரேவுக்கு விரிவாக கடிதம் எழுதி உள்ளேன். என்னை அழைத்தால், எனது நிலைப்பாடு குறித்து தெரிவிப்பேன். அதன்பிறகு எதிர்காலம் குறித்து முடிவு எடுப்பேன். அனில் பரப் எஸ்.டி. பஸ் ஊழியர்கள் போராட்டத்தை தவறாக கையாண்டு வருகிறார். ஊழியர்கள் போராட்டம் நடந்து வரும் நிலையில், எனது அரசியல் வாழ்க்கையை முடிக்க அவர் ரத்னகிரியில் பிரசாரம் செய்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மராட்டியத்தில் மகாவிகாஸ் கூட்டணி ஏற்பட்ட பிறகு வெளிப்படையாக சிவசேனா தலைவர்கள் மோதி கொள்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் சிவசேனாவில் இருந்து நாராயண் ரானே, சகன் புஜ்பால், ராஜ் தாக்கரே போன்ற முக்கிய தலைவர்கள் விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story