கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்காக பொதுமக்கள் கூட வேண்டாம்: மும்பை மாநகராட்சி
ஒமைக்ரான் வேகமாக பரவி வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள மாநகராட்சி, பொது மக்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்காக கூட வேண்டாம் என வலியுறுத்தி உள்ளது.
விதி மீறினால் நடவடிக்கை
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் மராட்டியத்தில் வேகமாக பரவத்தொடங்கி உள்ளது. நேற்றுவரை மாநிலத்தில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தலைநகர் மும்பையில் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பொது மக்கள் பொது இடங்களில் திரளும் போது மேலும் தொற்று வேகமாக பரவலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் இதன்காரணமாக 3-வது கொரோனா அலை ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே மும்பை மாநகராட்சி நேற்று பல்வேறு அறிவுறுத்தல்கள், கட்டுபாடுகளை விதித்து உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில், கொரோனா தடுப்பு விதி மீறல்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வார்டு அளவில் குழு அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த குழுவினர் போலீசாருடன் இணைந்து செயல்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருந்து நிகழ்ச்சிகள்
இதேபோல ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த மாதம் 27-ந் தேதி மாநில அரசு வெளியிட்ட கட்டுப்பாடுகள், கடந்த 14-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு குறித்து மும்பை போலீசார் வெளியிட்ட உத்தரவுகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
மேலும் ஒமைக்ரான் பரவலை தடுக்க மாநகராட்சி பிறப்பித்துள்ள கட்டுபாடுகள் வருமாறு:-
உள் அரங்குகளில் நடக்கும் நிகழச்ச்களில் 50 சதவீதம் பேர் மட்டும் கலந்து கொள்ளலாம். திறந்தவெளியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மொத்த கொள்ளவில் 25 சதவீதம் பேர் மட்டும் பங்கு பெறலாம். 1,000 பேருக்கு அதிகமானவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு மாநகராட்சியிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
ஓட்டல்கள், உணவகங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் தனியார், அரசு நிறுவனங்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். பொது இடங்கள், பொது போக்குவரத்தில் பயணம் செய்ய 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதேபோல கிறிஸ்துமஸ், புத்தாண்டு விருந்து நிகழ்ச்சிகளை தவிர்க்குமாறு பொது மக்களுக்கு மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் கேட்டு கொண்டு உள்ளார். சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய பிரபலங்கள், புகழ் பெற்றவர்கள் தற்போது நிலவும் சூழல் பற்றி தெரிந்து கவனமாக செயல்பட வேண்டும் எனவும் கூறினார்.
Related Tags :
Next Story