3வது வாரத்தில் 10 மணிநேரம் மட்டுமே இயங்கிய நாடாளுமன்ற மேலவை
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 3வது வாரத்தில் மொத்தம் 10 மணிநேரம் 14 நிமிடங்களே மேலவை இயங்கியுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்தொடர் வருகிற 23ந்தேதி நிறைவடைகிறது. இந்த சூழலில், புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ், 12 எம்.பி.க்கள் சஸ்பெண்டு ஆகியவற்றுக்கு எதிரான அமளியால் இரு அவைகளின் நடவடிக்கைகள் முடங்கி போயின.
இந்த நிலையில், நாடாளுமன்ற மேலவை செயலகம் வெளியிட்டுள்ள செய்தியில், முதல் மற்றும் 2வது வாரத்தில் முறையே 49.70 சதவீதம் மற்றும் 52.50 சதவீதம் என்ற அளவில் அவை நடவடிக்கைகள் இருந்தன.
எனினும், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் 3வது வாரம் முடங்கியது. இதனால், கூட்டத்தொடரின் 3வது வாரத்தில் மொத்தம் 10 மணிநேரம் 14 நிமிடங்களே மேலவை இயங்கியுள்ளது. மொத்தமுள்ள 27 மணிநேரம், 11 நிமிட அமர்வு நேரத்தில் 62.40 சதவீதம் வீணானது.
இதேபோன்று, பட்டியலிடப்பட்ட மொத்தம் 75 கேள்விகளில் 4க்கு மட்டுமே துறை சார்ந்த மந்திரிகள் வாய்வழியேயான பதில் அளித்துள்ளனர். அந்த வாரத்தில், கேள்வி நேரத்தில் 11.40 சதவீதம் அளவே பயன்படுத்தப்பட்டு உள்ளது என்றும் செயலகம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story