இந்தியாவில் 161 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு - மத்திய அரசு தகவல்


இந்தியாவில் 161 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 20 Dec 2021 4:03 PM IST (Updated: 20 Dec 2021 4:03 PM IST)
t-max-icont-min-icon

நாட்டில் 88% மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுவிட்டது என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் இதுவரை 138 கோடியே 2 லட்சத்து 23 ஆயிரத்து 188 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 82 கோடியே 92 லட்சத்து 19 ஆயிரத்து 869 பேரு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 55 கோடியே 10 லட்சத்து 3 ஆயிரத்து 319 பேர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் நிலவி வரும் கொரோனா பாதிப்பு தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டியா விளக்கம் அளித்தார். 

அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் தகுதியுடைய 88 சதவிகித மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுவிட்டது. 58 சதவிகிதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு விட்டது. மாநிலங்களில் தற்போது 17 கோடி தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு உள்ளது. தற்போது மாதத்திற்கு 31 கோடி கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடம் உள்ளது. அது அடுத்த 2 மாதங்களில் 45 கோடியை எட்டும்.

தற்போது வரை இந்தியாவில் 161 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலைமையை தினமும் வல்லுனர்கள் மூலம் மத்திய அரசு கண்காணித்து வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது கொரோனா அலையின் அனுபவத்தின் மூலம் அடுத்த கொரோனா மாறுபாட்டின் போது பிரச்சினைகளை சந்திக்கக்கூடாது என்பதற்காக முக்கியமான மருந்துகளை சேகரித்து வைத்துள்ளோம்’ என்றார்.

Next Story