கர்நாடகத்தில் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வருவது உறுதி - பசவராஜ் பொம்மை திட்டவட்டம்
கர்நாடகத்தில் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வருவது உறுதி என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக கூறினார்.
பெங்களூரு,
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் பெலகாவியில் நேற்று மடாதிபதிகள் மாநாடு நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கர்நாடகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு இருந்த காங்கிரஸ் ஆட்சி, கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவர முடிவு செய்தது. ஆனால் அரசியல் காரணங்களால் காங்கிரஸ் கட்சி அந்த முடிவில் இருந்து பின்வாங்கியது. இப்போது நாங்கள் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வருகிறோம். இதை காங்கிரஸ் எதிர்க்கிறது. இதன் மூலம் அக்கட்சி இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுகிறது.
நமது நாட்டில் பக்தி போராட்டம் நடக்கிறது. பசவண்ணர் முதல் சங்கராச்சாரியார் வரை பக்தி பரவச போராட்டங்கள் நடந்து வந்துள்ளன. புத்த மதத்தால் நாம் சிறிது பாதிக்கப்பட்டு உள்ளோம். ரகசியமாக மதமாற்றம் நடக்கிறது. ரகசியமாக நடைபெறும் இந்த மதமாற்றத்தை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் சட்டம் கொண்டு வருகிறோம்.
பிறப்பை யாரும் முடிவு செய்வது இல்லை. ஆனால் ஒருவர் எந்த மதத்தில் பிறந்து அந்த கலாசாரத்தை பின்பற்றுகிறாரோ, அவரை வேறு மதத்திற்கு மாற்றுவது நியாயமற்றது. நம்மிடையே உள்ள ஏழ்மை போன்ற விஷயங்களை பயன்படுத்தி மதமாற்றம் நடைபெறுவது சரியல்ல. அதனால் நாங்கள் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வருவது உறுதி.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
Related Tags :
Next Story