‘ஒமைக்ரானுடன் போராட இந்தியா தயார்’ - மாநிலங்களவையில் மத்திய மந்திரி உறுதி


‘ஒமைக்ரானுடன் போராட இந்தியா தயார்’ - மாநிலங்களவையில் மத்திய மந்திரி உறுதி
x
தினத்தந்தி 21 Dec 2021 6:24 AM IST (Updated: 21 Dec 2021 6:24 AM IST)
t-max-icont-min-icon

ஒமைக்ரானுடன் போராட இந்தியா தயாராக இருப்பதாக மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா உறுதிபட தெரிவித்தார்.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று விவாதம் நடந்தது. இதற்கு மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா பதில் அளித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், “நாட்டில் ஒமைக்ரான் பரவலை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த தொற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே அரசு தொடங்கி விட்டது. ஒமைக்ரானை எதிர்த்து போரிட இந்தியா தயாராகவே இருக்கிறது. இந்த தொற்று தொடர்பாக மாநிலங்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் அரசு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது.

ஒமைக்ரான் தொடர்பாக எத்தகைய நெருக்கடியையும் சமாளிக்க மருந்து மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. மேலும் 48 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் மாநிலங்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தியை மாதத்துக்கு 45 கோடி என்ற அளவுக்கு அடுத்த 2 மாதங்களில் உயர்த்தப்படும். நாடு முழுவதும் 88 சதவீத பயனாளிகள் முதல் டோசும், 58 சதவீதத்தினர் 2-வது டோசும் போட்டு உள்ளனர்” என்று மன்சுக் மாண்டவியா கூறினார்.

* இயற்கை பேரிடர் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மாநிலங்களவையில் பதில் அளித்த ஜல்சக்தி மந்திரி கஜேந்திர சிங் செகாவத், நடப்பு 2021-22-ம் ஆண்டில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இயற்கை பேரிடரால் உயிரிழந்திருப்பதாக கூறினார்.

கங்கை நதி தூய்மை திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.30,780 கோடி மதிப்பிலான 357 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக கூறிய அவர், இதில் 178 திட்டங்கள் முடிவடைந்து இயங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

* 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மாநிலங்களவை நேற்றும் முடங்கியது. அந்தவகையில் மாலை 5 மணி வரை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* மக்களவையில் கல்வித்துறை தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த இணை மந்திரி அன்னபூர்ணா தேவி, உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2790 புகார்கள் கூறப்பட்டு இருப்பதாகவும், இதில் தொடர்புடைய சுமார் 1300 பேர் தண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

* இதைப்போல கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போது, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும், இதில் 24 பேர் தலித் பிரிவினர் என்றும் கூறினார்.

* மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட உயிரியல் பன்முகத்தன்மை (திருத்தம்) மசோதா மற்றும் மத்தியஸ்த மசோதா ஆகியவற்றை முறையே நாடாளுமன்ற கூட்டுக்குழு மற்றும் சட்ட அமைச்சக நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

Next Story