சிவசேனா மந்திரியின் சர்ச்சை பேச்சு: ஹேமமாலினி கண்டனம்


சிவசேனா மந்திரியின் சர்ச்சை பேச்சு: ஹேமமாலினி கண்டனம்
x
தினத்தந்தி 21 Dec 2021 3:50 AM GMT (Updated: 21 Dec 2021 3:50 AM GMT)

தனது கன்னத்துடன் சாலையை ஒப்பிட்டு பேசிய மந்திரிக்கு ஹேமமாலினி பதிலடி கொடுத்துள்ளார்.

 மராட்டியம்,

மராட்டிய மாநில குடிநீர் வினியோக துறை மந்திரியாக இருப்பவர் குலாப்ராவ் பாட்டீல். சிவசேனா கட்சியை சேர்ந்த இவர், ஜல்காவ் புறநகர் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். இந்த நிலையில் இவர் தனது தொகுதியில் உள்ள சாலைகளை நடிகையும், பா.ஜனதா எம்.பி.யுமான ஹேமமாலினியின் கன்னத்துடன் இவர் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து அவர் ,"எனது அரசியல் போட்டியாளர்கள் எனது தொகுதியின் சாலை தரத்தை பார்க்க வேண்டும். 30 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர்கள் கூட எனது தொகுதிக்கு வந்து சாலையை பார்க்க வேண்டும். அவர்களுக்கு ஹேமமாலினியின் கன்னம் (அவர் தொகுதி சாலைகள்) பிடிக்கவில்லையென்றால் பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன்” என்றார்.

மந்திரியின் இந்த பேச்சுக்கு ஹேமமாலினி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர், "பலரும் இப்படிப் பேசுகிறார்கள். இதற்கு முன்பு லாலு பிரசாத் யாதவும் இப்படி பேசியிருக்கிறார். இப்படியான பேச்சுக்கள் மலிவான ரசனை கொண்டவை " என கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அமைச்சர் குலாப்ராவ், யாரையும் புண்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. எனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

கடந்த மாதம், ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர சிங் குடா தனது தொகுதிகளில் உள்ள சாலைகள் நடிகை கத்ரீனா கைஃப் கன்னங்களை ஒப்பிட்டுப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story