உன்னாவ் பெண் சென்ற கார் விபத்து வழக்கு; பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. விடுதலை
உன்னாவ் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
புதுடெல்லி,
2019 ஆம் ஆண்டு உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் 'தான் 17 வயது சிறுமியாக இருந்தபோது பாங்கர்மாவ் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கடந்த 2017-ம் ஆண்டில் தன்னை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்’ என உள்ளூர் போலீசில் புகார் செய்திருந்தார்.
லக்னோ நீதிமன்றத்தில் இந்த பாலியல் பலாத்கார வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. 2019 ஜூலை மாதம் 23-ம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண், அவரின் வக்கீல் மற்றும் உறவினர்களுடன் ரேபரேலி நோக்கி காரில் சென்றனர். அப்போது, அந்த கார் மீது லாரி மோதியதில் இளம்பெண்ணின் 2 உறவினர்கள் உயிரிழந்தனர்.
அந்த இளம்பெண்ணும் அவரது வக்கீலும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தனர். இந்த விபத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ண கொல்வதற்காக குல்தீப் சிங் செங்கார் நடந்த சதி என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் உள்பட 11 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், அந்த இளம்பெண்ணின் தந்தை கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக உ.பி.போலீசாரால் கடந்த 2-4-2018 அன்று கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை காவலில் இருந்த அவர் 9-4-2018 அன்று சிறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் குல்தீப் சிங் செங்காருக்கு தொடர்பு உள்ளதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், இந்த வழக்குகள் டெல்லி கோட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்குகளில் 2019 டிசம்பர் மாதம் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், உன்னாவ் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை உயிரிழப்பு சம்பவத்தில் தொடர்பு ஆகிய குற்றங்களில் குல்தீப் சிங் செங்கார் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டது.
குல்தீப் சிங் செங்கார் 2017-ம் ஆண்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், அந்த இளம்பெண்ணின் தந்தை சிறையில் உயிரிழந்த சம்பவத்தில் 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து டெல்லி கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து குல்தீப் சிங் செங்கார் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் பயணம் செய்த காரை லாரி மோதச்செய்து கொலை செய்ய முயற்சித்த வழக்கில் குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் உள்பட 11 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு டெல்லி கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் பயணித்த கார் மீது லாரியை மோதச்செய்து கொலை செய்த முயற்சித்த வழக்கில் இருந்து குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, இந்த வழக்கில் எஞ்சிய 4 பேர் குற்றத்தில் ஈடுபட்டதற்கான போதிய ஆதாரம் உள்ளதால் அவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உன்னாவ் பெண் பயணித்த கார் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்புடைய வழக்கில் இருந்து குல்தீப் சிங் செங்கார் விடுதலை செய்யப்பட்டுள்ளபோதும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை உயிரிழப்பில் தொடர்பு உள்ளிட்ட குற்றங்களில் குல்தீப் சிங் செங்கார் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story