சட்ட கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; பயிற்சி வழக்கறிஞர் கைது


சட்ட கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை;  பயிற்சி வழக்கறிஞர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2021 9:52 PM IST (Updated: 21 Dec 2021 9:52 PM IST)
t-max-icont-min-icon

சட்ட கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பயிற்சி வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர் கேஎஸ்என் ராஜேஷ். பயிற்சி வழக்கறிஞரான இவர் சட்ட கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சட்டக்கல்வி தொடர்பான பயிற்சிக்காக ராஜேஷிடம் அந்த மாணவி தற்காலிகமாக வேலைக்கு சேர்ந்துள்ளார். அந்த மாணவிக்கு ராஜேஷ் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

தனக்கு ராஜேஷ் பாலியல் தொல்லை கொடுப்பது தொடர்பாக கடந்த அக்டோபர் 18-ம் தேதி அந்த மாணவி போலீசில் புகார் அளித்தார்.

புகாரை தொடர்ந்து பயிற்சி வழக்கறிஞர் ராஜேஷ் தலைமறைவானார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த ராஜேஷ் நேற்று மங்களூருவில் உள்ள முதன்மை மாஜிஸ்திரேட் முன் ஆஜரானார். அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராஜேஷ் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். ராஜேஷ் தனக்கு உடல்நல பாதிப்பு உள்ளதாகவும், அதனை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கும்படியும் மனு தாக்கல் செய்திருந்தார். போலீசார் தரப்பில் ராஜேஷை 7 நாட்கள் காவலில் எடுத்த விசாரிக்க அனுமதி கோரப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ராஜேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தார்.

இதனை தொடர்ந்து, சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சி வழக்கறிஞர் ராஜேஷ் சிறையில் அடைக்கப்பட்டார். 

Next Story