என் குழந்தைகளின் சமூக வலைத்தள கணக்குகள் ‘ஹேக்’ செய்யப்பட்டன - பிரியங்கா குற்றச்சாட்டு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Dec 2021 6:33 AM IST (Updated: 22 Dec 2021 6:33 AM IST)
t-max-icont-min-icon

தன் குழந்தைகளின் சமூக வலைத்தள கணக்குகள் ‘ஹேக்’ செய்யப்பட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.

லக்னோ, 

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இந்தநிலையில், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தனது தொலைபேசி உரையாடலை ஒட்டுகேட்பதாக சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் 2 நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

இந்தநிலையில், நேற்று லக்னோவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

தொலைபேசி ஒட்டுகேட்பை விடுங்கள். எனது குழந்தைகளின் ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தள கணக்குகள் கூட ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளன. இந்த அரசுக்கு வேறு வேலை இல்லையா?

பெண்களுக்கு ஆதரவான எனது பிரசாரத்தின் விளைவாக, பிரதமர் மோடியும் பிரயாக்ராஜில் பெண்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள பெண்கள் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்றே இத்தனை நாட்களாக நான் பேசிவந்தேன். இன்று பிரதமருக்கு அது புரிந்துவிட்டது போலும். இன்று அவர் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிதியுதவி செய்துள்ளார்.

இதை ஏன் அவர் கடந்த 5 ஆண்டுகளில் செய்யவில்லை. இப்போது தேர்தல் வருகிறது. தேர்தல் ஆதாயத்துக்காக அவர் செய்கிறார். ஆனால் உத்தரப் பிரதேச பெண்கள் காங்கிரஸின் லட்கி ஹூன், லாட் சக்தி ஹூன் திட்டத்தால் விழிப்புணர்வு பெற்றுள்ளனர். பெண்சக்தி முன்பு அவர் பணிந்து விட்டார். இது பெண்களுக்கு கிடைத்த வெற்றி” என்று அவர் கூறினார்.

Next Story