நாடாளுமன்ற நேரடி ஒளிபரப்பை காண மொபைல் செயலி அறிமுகம்..!
நாடாளுமன்ற நேரடி ஒளிபரப்பை காண மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி, ‘‘ஆன்டி-நேஷனல் (தேச விரோதம்) என்ற வார்த்தைக்கு எந்த சட்டத்திலாவது மத்திய அரசு அர்த்தம் வரையறுத்துள்ளதா?’’ என்று கேட்டார்.
அதற்கு மத்திய உள்துணை இணை மந்திரி நித்யானந்த் ராய் அளித்த பதில் வருமாறு:-
சட்டங்களில் ‘ஆன்டி-நேஷனல்’ வார்த்தையின் பொருள் வரையறுக்கப்படவில்லை. இருப்பினும், சட்டவிரோத நடவடிக்கைகளையும், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களையும் ஒடுக்க குற்றவியல் சட்டங்களும், கோர்ட்டு உத்தரவுகளும் உள்ளன.
நெருக்கடி நிலை காலத்தில்தான், 1976-ம் ஆண்டு முதல் முறையாக அரசியல் சட்டத்தில் ‘ஆன்டி நேஷனல்’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது. மறு ஆண்டே அந்த வார்த்தை நீக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
மற்றொரு கேள்விக்கு நித்யானந்த் ராய் அளித்த பதில் வருமாறு:-
ஆந்திராவில், வெளிநாட்டு நன்கொடை பதிவு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட 18 தொண்டு நிறுவனங்கள், ஆசை காட்டி கிறிஸ்தவ மதத்துக்கு மதமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டதாக கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து புகார்கள் வந்துள்ளன. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனங்களின் சான்றிதழை ரத்து செய்ய சட்டத்தில் இடம் உள்ளது என்று அவர் கூறினார்.
இன்னொரு கேள்விக்கு நித்யானந்த் ராய் கூறியதாவது:-
பிறப்பு, இறப்பு பதிவு விவரங்களுடன் மற்ற தகவல் தொகுப்புகளை இணைக்க பிறப்பு இறப்பு பதிவு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதை இணையதளத்தில் வெளியிட்டு, பொதுமக்களின் கருத்து கேட்டு பெறப்பட்டுள்ளது.
தேசிய அளவில் குடிமக்கள் பதிவேடு தயாரிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
மக்களவையில், பட்டய கணக்காளர்கள், செலவு மற்றும் பணிகள் கணக்காளர்கள், கம்பெனி செயலாளர்கள் திருத்த மசோதா, கடந்த 17-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மேற்கண்ட தொழில் செய்பவர்களை ஒழுங்குபடுத்தும் அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக இந்த மசோதா கொண்டுவரப்பட்டது.
இந்தநிலையில், இம்மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்புவதற்கான திட்டத்தை நாடாளுமன்ற விவகார இணை மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார். அதன்படி, நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற அலுவல்களின் நேரடி ஒளிபரப்பை பார்ப்பதற்காக புதிய மொபைல் செயலி தொடங்கப்படுவதாக மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தின்போது அறிவித்தார். அதில், நாடாளுமன்ற ஆவணங்கள், எழுத்துவடிவிலான கேள்வி பதில்கள், குழுக்களின் அறிக்கைகள் ஆகியவற்றையும் பார்க்கலாம் என்று அவர் கூறினார்.
செல்போன்களில் எம்.பி.க்கள் அதை பதிவிறக்கம் செய்வதுடன், தங்கள் தொகுதி மக்களும் பதிவிறக்கம் செய்ய சொல்ல வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story