எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் தேசிய கீதம் பாடி போராட்டம்


எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் தேசிய கீதம் பாடி போராட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2021 2:48 PM IST (Updated: 22 Dec 2021 2:48 PM IST)
t-max-icont-min-icon

எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன் தேசிய கீதம் பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி,

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கடந்த மழைக்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். அப்போது, எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில எம்.பி.க்கள் நாடாளுமன்ற மரபை மீறி மேஜைகள் மீது ஏறியும், கோஷங்களை எழுப்பியும், கோப்புகளை தூக்கி எறிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த விவகாரத்தையடுத்து நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அதேவேளை லகிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய இணை மந்திரி அமித்மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடனும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், நடப்பு குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய கீதம் பாடியும், அரசியலமைப்பு சட்டத்தை வாசித்தும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் போராட்டத்தை வெளிப்படுத்தினர்.     

Next Story