‘பிரலே’ ஏவுகணை 2-வது நாளாக வெற்றிகரமாக சோதனை
பிரலே ஏவுகணை 2-வது நாளாக வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
பலசோர்,
முற்றிலும் உள்நாட்டிலேயே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டி.ஆர்.டி.ஓ.) ‘பிரலே’ ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலிஸ்டிக் ஏவுகணை, தரையில் இருந்து பாய்ந்து சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கவல்லது.
150 கி.மீ. முதல் 500 கி.மீ. தூரம்வரை பாய்ந்து சென்று இலக்கை தாக்கும். இந்த ஏவுகணை, நேற்று முன்தினம் முதல்முறையாக ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல்கலாம் தீவில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
இந்தநிலையில், நேற்று 2-வது நாளாக அதே தீவில் இந்த ஏவுகணை மீண்டும் சோதித்து பார்க்கப்பட்டது. அதிக எடையை சுமந்து கொண்டும், வெவ்வேறு தூர இலக்கை குறிவைத்தும் இச்சோதனை நடந்தது. அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து வெற்றிகரமாக செயல்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து 2 நாட்களாக ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடப்பது இதுவே முதல்முறை ஆகும். இதற்காக அதிகாரிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்கும், டி.ஆர்.டி.ஓ. தலைவர் சதீஷ் ரெட்டியும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story