ஒமைக்ரான்: நாம் எச்சரிக்கை, விழிப்புடன் இருக்கவேண்டும் - பிரதமர் மோடி


ஒமைக்ரான்: நாம் எச்சரிக்கை, விழிப்புடன் இருக்கவேண்டும் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 24 Dec 2021 7:48 AM IST (Updated: 24 Dec 2021 7:48 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு போர் இன்னும் முடிவடையவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவிலும் கடந்த 2-ந்தேதி நுழைந்த ஒமைக்ரான் வைரஸ் நாடு முழுவதும் தற்போது 300-க்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. டெல்டா வைரசை விட 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரான் தொற்று பரவலை தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து பிரதமர் மோடி சுகாதார நிபுணர்களுடன் நேற்று இரவு முக்கிய ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றவும், மாநில அரசின் செயல்திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கவும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். கொரோனா தொற்றுக்கு எதிராக போராட ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

புதிய கொரோனா மாறுபாட்டால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட அளவில் சுகாதார கட்டமைப்பை மேபடுத்தவும் அவர் உத்தரவிட்டார். மருந்துகள், ஆக்சிஜன் விநியோகம் உள்ளிட்டவை மாநிலங்களுக்கு முழுமையாக செயல்பட்டு வருகிறதா? என்பதை உறுதி செய்யவும் உத்தரவிட்டார்.

தகுதியுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்த மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

உயர் அதிகாரிகள் மட்டத்திலான இந்த கூட்டத்தின் பேசிய பிரதமர் மோடி, புதிய வகை கொரோனாவை கருத்தில் கொண்டு நாம் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் இன்றும் மிக முக்கியமானது’ என்றார்.   

Next Story