இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரியில் உச்சத்தை அடையலாம்: கான்பூர் ஐஐடி ஆய்வு
இது முந்தைய அலையை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
கான்பூர்,
கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றிக்கொண்டு உலக நாடுகளை மிரட்டி வருகிறது. தடுப்பூசி மூலம் மக்கள் தங்களை காத்து வருகின்றனர். இருப்பினும் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பல நாடுகள் வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தியாவில் வைரஸ் பரவல் தடுப்பூசியின் மூலம் கட்டுக்குள் வந்த நிலையில், புதிதாக தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் நாட்டின் பல மாநிலங்களில் பரவி வருகிறது.
இந்த நிலையில், கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் ஒமைக்ரான் வைரஸ் பரவல் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதன் முடிவில் தொற்றுநோயின் மூன்றாவது அலை பிப்ரவரி 2022 க்குள் உச்சத்தை எட்டக்கூடும் என்று அவர்கள் கணித்துள்ளனர். மூன்றாவது கொரோனா அலையை எதிர்கொள்ளும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் தரவை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர்.
எனினும், தடுப்பூசி செலுத்தப்பட்ட புள்ளிவிபரங்களை கருத்தில் கொள்ளாததால், தொற்றுபரவல் எண்ணிக்கையை துல்லியமாக மதிப்பிட முடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா போன்ற பல நாடுகளில், பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் தற்போது மூன்றாவது அலையை எதிர்கொள்கின்றனர். எனவே, இந்தியாவும் பிற நாடுகளும் பாதுகாப்பை அதிகப்படுத்துவதுடன் மற்றொரு அலைக்கு தயாராக இருக்க வேண்டும். இது முந்தைய அலையை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தாது என்று அவர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story