மீண்டும் அமல்படுத்தப்படுகிறதா வேளாண் சட்டங்கள்..? மந்திரியின் கருத்தால் சர்ச்சை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 Dec 2021 3:28 PM IST (Updated: 25 Dec 2021 3:28 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் வேளாண் சட்டங்கள் மீண்டும் அமல்படுத்தப்படுவது தொடர்பாக வேளாண் துறை மந்திரியின் கருத்தால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி அரசு 2019ஆம் ஆண்டில் நிறைவேற்றிய சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லிக்கு பேரணியாக சென்றனர்.  கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கிய இந்த போராட்டம் ஓராண்டாக நீடித்தது. இந்த சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யக்கோரியும் லாரிகள், டிராக்டர்கள் போன்ற ஏராளமான வாகனங்களில் அவர்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திக்ரி, சிங்கு எல்லை பகுதிகளில் விவசாயிகள் குவிந்தனர்.

இந்த சூழலில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்றும் குளிர்கால கூட்டத்தொடரில் அதற்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்ததாகவும் இருப்பினும், சிலருக்கு இதைப் புரிய வைக்க முடியவில்லை என்பதால் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச தேர்தலைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தனர். 

இந்நிலையில் விவசாய சட்டங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இது தொடர்பாக மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற தனியார் முதலீட்டு மாநாட்டில் பேசிய அவர், “ விவசாயத் திருத்தச் சட்டங்களை நாங்கள் கொண்டு வந்தோம்.  சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஒரு பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், சிலருக்கு இது பிடிக்கவில்லை. ஆனால், இதைக் கண்டு அரசு ஏமாற்றமடையவில்லை. இப்போது ஒரு படிதான் பின்வாங்கியுள்ளோம். ஆனால் விவசாயிகள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்பதால் கண்டிப்பாக மீண்டும் முன்னோக்கிச் செல்வோம்” என்று  நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோக்களும் தற்போது வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.



Next Story