மக்களுக்கு நன்மை பயக்கும் முடிவுகள் மட்டுமே எடுக்கப்படுகிறது: மோடிக்கு அமித்ஷா பாராட்டு
கடந்த அரசுகள் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டே முடிவுகளை எடுத்தன என்று அமித்ஷா சாடினார்.
புதுடெல்லி,
புதுடெல்லியில் நடைபெற்ற நல்லாட்சி தின நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பேசியதாவது:
மத்தியில் நல்லாட்சி கிடைக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் நீண்ட காலம் காத்திருந்தனர். அதை பிரதமர் மோடி அரசு கடந்த ஏழு ஆண்டுகளாக வழங்கி வருகிறது. கடந்த 21 அரசுகள் தங்கள் வாக்கு வங்கிகளை மனதில் வைத்து முடிவுகளை எடுத்துள்ளன.
ஆனால் மோடி அரசு வாக்கு வங்கிக்காக ஒருபோதும் மக்களுக்கு நல்லது போல தோன்றும் முடிவுகளை எடுத்தது இல்லை. மக்களுக்கு பயனளிக்கும் முடிவுகளை மட்டுமே மோடி அரசு எப்போதும் எடுத்து வருகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நல்ல நிர்வாகத்தை கொடுத்து வருவதை நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர். இது இந்தியாவின் முகத்தையே மாற்றி விட்டது. மோடி ஆட்சி மீது கடந்த 7 ஆண்டுகளில் எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. வெளிப்படையான நிர்வாகத்தை மோடி அரசு வழங்கி வருகிறது. அரசாங்கம் மீது மக்களுக்கும்,மக்கள் மீது அரசாங்கத்திற்கும் நம்பிக்கை இருக்க வேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story