பெங்களூருவில், முழு அடைப்பு போராட்டத்துக்கு அனுமதி இல்லை: போலீஸ் கமிஷனர் கமல்பந்த்


பெங்களூருவில், முழு அடைப்பு போராட்டத்துக்கு அனுமதி இல்லை: போலீஸ் கமிஷனர் கமல்பந்த்
x
தினத்தந்தி 25 Dec 2021 11:50 PM IST (Updated: 25 Dec 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கூறியுள்ளார்.

முழு அடைப்பு போராட்டம்

பெங்களூருவில் சத்ரபதி சிவாஜி சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து, பெலகாலவியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எம்.இ.எஸ். அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக அரசு வாகனங்கள், போலீஸ் ஜீப்புகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். ஒரு போலீஸ் ஜீப்புக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் மராட்டியத்திலும் கர்நாடக அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டன.

எம்.இ.எஸ். அமைப்பினரின் இந்த செயலை கண்டித்தும், கர்நாடகத்தில் எம்.இ.எஸ். அமைப்பை, தடை செய்ய வலியுறுத்தியும் வருகிற 31-ந் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்து உள்ளது. தங்களது கோரிக்கையை அரசு வருகிற 29-ந் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் 31-ந் தேதி போராட்டம் நடப்பது உறுதி என்று வாட்டாள் நாகராஜ் தெரிவித்து உள்ளார்.

கடும் நடவடிக்கை

இந்த நிலையில் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் 31-ந் தேதி நடக்க உள்ள முழு அடைப்பு போராட்டம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கும்போது கூறியதாவது:-

வருகிற 31-ந் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்து உள்ளது. பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த இதுவரை யாரும் எங்களிடம் அனுமதி கேட்கவில்லை. ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் போராட்டம் நடத்த நாங்கள் யாருக்கும் அனுமதி கொடுக்க மாட்டோம். முழு அடைப்பு போராட்டம் நடத்த அனுமதி இல்லை. இதை மீறி போராட்டம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வீட்டில் கொண்டாட வேண்டும்

புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே புத்தாண்டு கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். வேறு யாருக்கும் அனுமதி இல்லை.

இதனால் முன்பதிவு செய்யாதவர்கள் ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அவர்கள் வீட்டில் இருந்தே புத்தாண்டை கொண்டாட வேண்டும். ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டை கொண்டாடுபவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இதனை போலீசார் உன்னிப்பாக கவனிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story