ஜனவரி 10-ந்தேதி பூஸ்டர் தடுப்பூசி; சிறுவர்களுக்கு 3-ந்தேதி முதல் தடுப்பூசி - பிரதமர் மோடி அறிவிப்பு
உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானின் பரவல் வேகம் எடுத்து வரும் நிலையில் இந்தியாவில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி ஜனவரி 3-ந்தேதி முதல் போடப்படும் என்றும், ஜனவரி 10-ந் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
கொரோனா வைரசுக்கு எதிரான ஒரே பேராயுதமாக தடுப்பூசி திகழ்கிறது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய தடுப்பூசியை இந்தியாவில் புனே நகரில் உள்ள சீரம் நிறுவனம் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் தயாரித்து வினியோகிக்கிறது.
இதேபோன்று உள்நாட்டில் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி, தயாரித்து வினியோகம் செய்து வருகிறது.
ஜனவரி 16-ந்தேதி முதல்
இந்த இரு தடுப்பூசிகளையும் இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் பொதுமக்களுக்கு போடும் பணி முன்னுரிமை அடிப்படையில் தொடங்கியது.
பின்னர் ரஷியாவின் ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசியும், தேசிய தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டது. ஆனால் தனியார் ஆஸ்பத்திரிகளில் மட்டும் இந்த தடுப்பூசி போடப்படுகிறது.
முதலில் முன்களப்பணியாளர்கள்
தடுப்பூசிக்கான பயனாளிகள் பட்டியலில் சுகாதார பணியாளர்கள் முதலிடத்தை பிடித்தனர். 2-ம் இடத்தை பிடித்திருந்த முன்களப்பணியாளர்கள் பிப்ரவரி 2-ந்தேதி முதல் தடுப்பூசி போட்டனர்.
மார்ச் 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. அதேநேரம் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
அனைவருக்கும் தடுப்பூசி
இந்நிலையில் மே 1-ந்தேதி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. பின்னர் அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற திட்டத்துடன் ஜூன் 21-ந்தேதி முதல் வெகுஜன இயக்கமாக இது மாற்றப்பட்டது.
அதன்பின் தடுப்பூசி பணி வேகமடைய தொடங்கியது. கடந்த அக்டோபர் 21-ந்தேதி 100 கோடி தடுப்பூசிகள் என்ற இமாலய இலக்கை இந்தியா எட்டியது.
12-18 வயது சிறாருக்கும்
இந்நிலையில், 12 முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறாருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.
12 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு அவசர பயன்பாட்டுக்கான பாரத் பயோடெக் நிறுவனத்தின் விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம், நிபந்தனைகளுடன் கோவேக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க பரிந்துரைத்தது.
கொரோனா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை மற்றொரு நிபுணர் குழு மதிப்பீடு செய்தது. அதன்பிறகு பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து கூடுதல் தகவல்களை தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் கேட்டு பெற்றார்.
அதைத்தொடர்ந்து 12 முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கோவேக்சின் தடுப்பூசிக்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கியிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மோடி பேச்சு
இதற்கிடையே பிரதமர் நரேந்திரமோடி நேற்று இரவு 9.45 மணிக்கு திடீரென டெலிவிஷனில் தோன்றி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பீதியடைய வேண்டாம்
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள். நாட்டில் இயல்புநிலை திரும்பி வருகிறது. பொருளாதாரமும் சீரடைந்து வருகிறது. இதற்கிடையே உலகின் பல நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.
முககவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவுவது போன்றவற்றை கடைபிடிப்பதே நாம் பாதுகாப்பாக இருக்க வழி. இதனை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
நாடு முழுவதும் 18 லட்சம் படுக்கைகள் ஆஸ்பத்திரிகளில் தயாராக உள்ளன. ஒமைக்ரான் பரவலை நினைத்து யாரும் பீதியடைய வேண்டாம்.
ஒமைக்ரானை எதிர்த்து போராட அனைத்து உள் கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. குழந்தைகளுக்காக ஆக்சிஜன் வசதியுடன் 90 ஆயிரம் படுக்கைகள் ஆஸ்பத்திரிகளில் தயார் நிலையில் உள்ளன.
தடுப்பூசி
உலகிலேயே தடுப்பூசி போடும் பணியை சிறப்பாக தொடங்கி இந்தியா மேற்கொண்டு வருகிறது. மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் தட்டுப்பாடு இன்றி அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் 90 சதவீதத்துக்கு மேற்பட்ட மக்கள் முதல் தவணை தடுப்பூசி போட்டு உள்ளனர்.
டெல்லி, உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
மாநிலங்களுக்கு 4 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. உலகிலேயே முதல்முறையாக டி.என்.ஏ. தடுப்பூசி பயன்படுத்த விரைவில் அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதுதவிர மூக்கு வழியாக செலுத்தும் சொட்டு மருந்துக்கும் அனுமதி அளிக்கப்படும். தடுப்பூசி திட்டம் விஞ்ஞான அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ஜனவரி 3-ந்தேதி முதல்
கொரோனா பரவலை தடுக்க 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3-ந்தேதி முதல் தொடங்க உள்ளது.
இதேபோல் ஜனவரி 10-ந் தேதி முதல் முன் எச்சரிக்கை தடுப்பூசி (பூஸ்டர்) செலுத்தும் பணி தொடங்கும். முதல்கட்டமாக மருத்துவப்பணியாளர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும், இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதமாக உள்ளது.
இவ்வாறு மோடி பேசினார்.
Related Tags :
Next Story