பீகார் தொழிற்சாலை விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் அறிவிப்பு
பீகார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தொழிற்சாலையில், இன்று காலை 10 மணியளவில் அங்குள்ள கொதிகலன் ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாய்லர் வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த தொழிற்சாலை ஞாயிற்றுக்கிழமையிலும் இயங்கியது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என மாநில வருவாய்த்துறை மந்திரி ராம்சூரத் ராய் தெரிவித்துள்ளார். பாய்லர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களின் மருத்துவ உதவிக்காக தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story