கர்நாடக முதல்-மந்திரி மாற்றம் குறித்து யாரும் கருத்து கூறக்கூடாது: மேலிட பொறுப்பாளர் அருண்சிங்
கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றம் குறித்து மந்திரிகள் கருத்து கூறக்கூடாது என்று பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் உத்தரவிட்டுள்ளார்.
முருகேஷ் நிரானி
கர்நாடக முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை கடந்த 2020-ம் ஆண்டு பதவி ஏற்றார். யாருமே எதிர்பாராத நிலையில் அவர் அந்த பதவிக்கு வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பாகல்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா, தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி விரைவில் கர்நாடக முதல்-மந்திரியாக நியமனம் செய்யப்படுவார் என்று கூறினார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பசவராஜ் பொம்மை சமீபத்தில் தனது சொந்த தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, கண்கள் கலங்க உணர்வு பூர்வமாக பேசி, பதவி நிரந்தரம் அல்ல என்று கூறினார். இது அவர் முதல்-மந்திரி பதவியை விட்டு விலகுவார் என்ற செய்தியை வெளிப்படுத்துவதாக இருந்ததாக அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டது. பெலகாவியில் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றது.
கருத்து கூறக்கூடாது
இந்த கூட்டத்தொடரின் போது, மந்திரிகள் ஈசுவரப்பாவும், முருகேஷ் நிரானியும் தனியா சந்தித்து பேசினர். அவர்கள் பசவராஜ் பொம்மை மாற்றம் குறித்து பேசியதாக தகவல் வெளியானது. இத்தகைய தகவல்கள் ஆளும் பா.ஜனதாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மந்திரிகள் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் யாரும் முதல்-மந்திரி மாற்றம் குறித்து கருத்து கூறக்கூடாது என்று அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் அருண்சிங் உத்தரவிட்டுள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாராவது கருத்து தெரிவித்தால் அத்தகையவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story