கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பயந்து மரத்தில் ஏறிய 40 வயது நபர்


கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பயந்து மரத்தில் ஏறிய 40 வயது நபர்
x
தினத்தந்தி 28 Dec 2021 9:29 PM IST (Updated: 28 Dec 2021 9:29 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பயந்து 40 வயது நிரம்பிய நபர் மரத்தில் ஏறி அமர்ந்துகொண்டார்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு 100 சதவிதம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்குடன் அரசு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் கொனேரிகுப்பம் கிராமத்தில் நேற்று சுகாதாரத்துறை பணியாளர்கள் வீடு விடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த 40 வயது நிரம்பிய நபர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் கூட இன்னும் போடவில்லை என்பது சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தெரியவந்தது.

இதனையடுத்து, அந்த நபரின் வீட்டிற்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் வந்துள்ளனர். மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி அவரிடம் கூறியுள்ளனர். 

கொரோனா தடுப்பூசி குறித்த பயத்தில் இருந்த அந்த நபர் தனக்கு தடுப்பூசி செலுத்த வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால், தடுப்பூசியால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதை செலுத்திக்கொள்ளுங்கள் என கூறி சுகாதாரத்துறை அந்த நபருக்கு தடுப்பூசி போட வற்புறுத்தியுள்ளனர்.

ஆனால், அந்த நபர் தடுப்பூசிக்கு பயந்து அருகில் இருந்த மரத்தின் மீது வேகமாக ஏறிக்கொண்டார். அவர் மரத்தின் உச்சிக்கு சென்று அங்கேயே அமர்ந்து கொண்டார். தடுப்பூசியால் எந்த ஆபத்தும் இல்லை எனவும், மரத்தை விட்டு கிழே இறங்கி வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படியும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கூறினர். ஆனால், அந்த நபர் மரத்தை விட்டு கீழே இறங்காமல் அங்கேயே இருந்துகொண்டார்.

நீண்ட நேரம் அழைத்தும் மரத்தை விட்டு அந்த நபர் கீழே இறங்காததால் அந்த நபருக்கு தடுப்பூசி செலுத்தாமலேயே சுகாதாரத்துறை ஊழியர்கள் திரும்பிச்சென்றனர்.

Next Story