5 மாநில தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி - மத்திய அரசு அறிவிப்பு
5 மாநில சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதி பெறுவார்கள் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
புதுடெல்லி,
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான கால அட்டவணையை அடுத்த மாத தொடக்கத்தில் தேர்தல் கமிஷன் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரிப்பதால், தேர்தலை தள்ளிவைப்பதை பரிசீலிக்குமாறு அலகாபாத் ஐகோர்ட்டு யோசனை தெரிவித்தது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகத்துடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது.
தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்துமாறு சுகாதார அமைச்சகத்தை கேட்டுக்கொண்டது. இதனால், 5 மாநில தேர்தல் தள்ளிவைக்கப்படாமல், திட்டமிட்டபடி நடப்பது உறுதி என்று தெரிகிறது. இதற்கிடையே, சுகாதார, முன்கள பணியாளர்கள், 60 வயதை கடந்தவர்கள், இணை நோய் கொண்டவர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி ஜனவரி 10-ந் தேதி தொடங்குகிறது.
5 மாநில சட்டசபை தேர்தல் நடப்பதால், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான தகுதியை பெறுவார்கள் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
5 மாநில சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்கள், முன்கள பணியாளர்களாக சேர்க்கப்படுவார்கள். அதன்மூலம், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான தகுதியை பெறுவார்கள். அவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்.
2-வது டோஸ் தடுப்பூசி போட்ட நாளில் இருந்து 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் முடிந்தவுடன் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் முதல் டோஸ் போட்டவர்கள் எண்ணிக்கை 100 சதவீதத்தை நெருங்கி வருகிறது. ஆனால், உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் தடுப்பூசி எண்ணிக்கையில் தேசிய சராசரியை விட பின்தங்கி உள்ளன.
Related Tags :
Next Story