சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி ராஜினாமா செய்திருக்க வேண்டும் - ராகுல் காந்தி


சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி ராஜினாமா செய்திருக்க வேண்டும் - ராகுல் காந்தி
x

மன்மோகன் சிங் பிரதமராக இருந்திருந்தால் சீன எல்லை பிரச்சினையில் ராஜினாமா செய்திருப்பார் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.

ஜெய்ப்பூர்,

ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

“மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, சீன அரசு இந்திய பகுதியில் உள்ள நிலங்களை ஆக்கிரமிப்பு செய்திருந்தால், அவர் அப்போதே தனது பதவியை ராஜினாமா செய்திருப்பார்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இந்த விஷயத்தில் இன்னும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் இருக்கிறார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு வெறுப்பை பரப்பி வருகிறது. ஆனால் அதற்கு நாம் அன்பின் வழியில் எதிர்வினை ஆற்ற வேண்டும்” என்று பேசினார்.

இந்த பயிற்சி கூட்டம் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிர்வினை ஆற்றும் விதத்தில் நடத்தப்படுகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடம் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.மேலும் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் பொய்யான தேசியவாதத்தை எதிர்த்து சவால் விடும் விதத்தில் செயல்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.

இதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூன்று நாள் மாநாடு நடைபெற உள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு விழாவில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கட்சி தொண்டர்களுக்கு காணொளி காட்சி மூலம் ஆற்றிய உரையில், “நமது சுதந்திர போராட்டத்தில் எந்த வித பங்களிப்பையும் அளிக்காத வெறுப்புணர்வு மற்றும் பிளவு சித்தாந்தங்களை கொண்ட சக்திகள் தற்போது நமது மதச்சார்பற்ற சமூகத்தில் அழிவை ஏற்படுத்துகின்றன” என்று பாஜகவை கடுமையாக தாக்கி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story