பண மதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்ததை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள வேண்டும்: ஓவைசி


பண மதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்ததை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள வேண்டும்: ஓவைசி
x
தினத்தந்தி 29 Dec 2021 10:00 AM GMT (Updated: 29 Dec 2021 10:00 AM GMT)

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயின் வீட்டில் 177 கோடி ரூபாய்கும் மேல் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஐதராபாத்,

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயின் வீட்டில் 177 கோடி ரூபாய்கும் மேல் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நடத்தி வரும் தொழிலதிபரான பியூஷ் ஜெயின் வீட்டில், இவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது நாடு முழுவதும் பேசுபொருளானது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஜிஎஸ்டி செலுத்தாமல் பொருட்களை விற்றதன் மூலம் கிடைத்தது என பியூஷ் ஜெயின் வாக்குமூலம் அளித்திருப்பதாக  அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ரொக்கமாக இவ்வளவு பெரிய தொகை கைப்பற்றப்பட்டது அரசியல் வட்டாரத்திலும் புயலை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் பாஜக - சமாஜ்வாடி இடையே காரசார வாதங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட பிறகும் இவ்வளவு பெரிய தொகை ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டதை காட்டுவதாக ஐதராபாத் எம்.பி ஓவைசி, பிரதமர் மோடியை சாடியுள்ளார். 

இது குறித்து ஓவைசி கூறும் போது, “ பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகும் இவ்வளவு பெரிய தொகை எப்படி உத்தர பிரதேச தொழிலதிபர் இல்லத்தில்  கைப்பற்றப்பட்டது என்பது குறித்து பிரதமர் மோடி  விளக்கமளிக்க வேண்டும். தனது சிந்தனையில் உதித்த இந்த திட்டம் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டதை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள வேண்டும். பணமதிப்பிழப்பு நடவடிக்கை சிறு குறு தொழில்களையும் வேலை வாய்புப்புகளை பறித்து விட்டது” என்று தெரிவித்துள்ளார். 


Next Story