கர்நாடகாவில் நாளை நடைபெற இருந்த முழு அடைப்பு வாபஸ்...!
கர்நாடகாவில் நாளை நடைபெற இருந்த முழு அடைப்பை ஒத்திவைப்பதாக கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெலகாவியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வன்முறை ஏற்பட்டது. சுதந்திர போராட்ட வீரர் சங்கொள்ளி ராயண்ணா சிலை சேதப்படுத்தப்பட்டது.
இதற்கு கர்நாடக அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதில் மராட்டிய ஏகிகரண் (எம்.இ.எஸ்.) அமைப்பு தான் ஈடுபட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர். கர்நாடக அரசு, சட்டசபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. எம்.இ.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க சட்ட ரீதியாக பரிசீலனை செய்வதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
இதற்கிடையே, எம்.இ.எஸ். அமைப்புக்கு உடனடியாக தடை விதிக்க கோரி 31-ந் தேதி (நாளை) முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. இந்த முழு அடைப்பிற்கு ஒத்துழைப்பு தருமாறு கன்னட சங்கங்களில் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்தார். ஆனால், கன்னட சினிமா துறையினர் இந்த முழு அடைப்பு போராட்டத்தை ஆதரிக்கவில்லை.
இந்த நிலையில், முழு அடைப்பை போராட்டம் நடத்துவதை கைவிடுமாறு கன்னட அமைப்பினருக்கு கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, வாட்டாள் நாகராஜை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு கூறினார்.
அதன் அடிப்படையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் கிருஷ்ணா இல்லத்தில் இன்று சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின்போது நாளை (டிசம்பர் 31) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெறும்படி கன்னட அமைப்பிடம் பசவராஜ் பொம்மை கேட்டுக் கொண்டார். முதல்- மந்திரியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் நாளை நடைபெறவிருந்த முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
போராட்டம் வாபஸ் குறித்து வாட்டாள் நாகராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வன்முறையில் ஈடுபட்டு வரும் மராட்டிய ஏகிகரண் சமிதியை தடை செய்ய வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கை. அந்த கோரிக்கையை பசவராஜ் பொம்மையிடம் முன்வைத்தேன். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்-மந்திரி உறுதி அளித்துள்ளார். அவரது உறுதிமொழியை ஏற்று முழு அடைப்பை வாபஸ் பெறுகிறேன். முதல்-மந்திரி மீது நம்பிக்கை வைத்து நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
ஒருவேளை அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் நாட்களில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்துவோம். முழு அடைப்பு வாபஸ் பெற்றாலும் பெங்களூருவில் நாளை பேரணி நடத்துவோம். எம்.இ.எஸ். அமைப்பு மீது வருகிற 22-ந் தேதிக்குள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். அதற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் முழு அடைப்பு தேதியை அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story