காஷ்மீர் என்கவுண்ட்டர்; 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
காஷ்மீர் என்கவுண்ட்டரில் கடந்த 3 நாட்களில் 9 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் எல்லை பகுதி வழியேயான ஊடுருவல்கள் நடந்து வந்தபோதிலும், படையினர் அவற்றை முறியடித்து வருகின்றனர். இந்த நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து அப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். ஷஹாபாத் பகுதியில் உள்ள நவ்ஹாம் கிராமத்தில் தேடுதல் வேட்டை நடத்தியபோது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதில், 2 ராணுவ வீரர்கள், ஒரு போலீஸ்காரர் என 3 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்றது.
இதேபோன்று, ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள மிர்ஹாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, குறிப்பிட்ட பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.
காஷ்மீரில் நடந்த இரு வேறு என்கவுண்ட்டர் (அனந்த்நாக் மற்றும் குல்காம்) சம்பவங்களில் நேற்று 6 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்கள் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர்.
அவர்களில் 2 பேர் பாகிஸ்தானியர்கள் மற்றும் 2 பயங்கரவாதிகள் உள்ளூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். மற்ற 2 பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என காஷ்மீர் ஐ.ஜி. கூறினார்.
இந்த நிலையில், காஷ்மீர் எல்லையில் ஊடுருவல்களை முறியடிக்கும் வகையில் நேற்றிரவு மற்றொரு என்கவுண்ட்டர் நடத்தப்பட்டது. இதுபற்றி காஷ்மீர் ஐ.ஜி. வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் சுஹைல் அகமது ராவுத்தர் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவர், ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் ஆவார்.
ஜீவான் பயங்கரவாத தாக்குதலுடன் சுஹைலுக்கு தொடர்பு உள்ளது. இந்த தாக்குதலில் தொடர்புடைய அனைத்து பயங்கரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டு விட்டனர் என அவர் தெரிவித்து உள்ளார்.
இதற்கு முன் காஷ்மீர் போலீசார் வெளியிட்ட செய்தியில், என்கவுண்ட்டரில் 3 போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த ஒருவர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story