மராட்டியத்தில் 10 மந்திரிகள் மற்றும் 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா


மராட்டியத்தில் 10 மந்திரிகள் மற்றும் 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 Jan 2022 6:11 AM GMT (Updated: 1 Jan 2022 6:11 AM GMT)

மராட்டிய மாநிலத்தில் 10 மந்திரிகள் மற்றும் 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என துணை முதல் மந்திரி அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

மும்பை

மராட்டியத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ், தற்போது மீண்டும் காட்டுத்தீ வேகத்தில் பரவி வருகிறது. நேற்று முன்தினம் மாநிலத்தில் 5 ஆயிரத்து 368 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். 

இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் 8 ஆயிரத்து 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல 8 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள்.  மாநிலத்தில் தற்போது தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 509 ஆக உயர்ந்து உள்ளது. 10 நாட்களுக்கு முன்பு வரை சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் இதுவரை 66 லட்சத்து 78 ஆயிரத்து 821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 65 லட்சத்து 9 ஆயிரத்து 96 பேர் குணமடைந்து உள்ளனர். 1 லட்சத்து 41 ஆயிரத்து 526 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதேபோல மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 428 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் 47 சதவீதம் அதிக பாதிப்பு ஆகும். அன்று நகரில் 3 ஆயிரத்து 671 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

மாநிலத்தில் 10 மந்திரிகள் மற்றும் 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என துணை முதல் மந்திரி அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Next Story