இந்தியா, பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிறுவனங்களின் பட்டியல் பரிமாற்றம்


இந்தியா, பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிறுவனங்களின் பட்டியல் பரிமாற்றம்
x
தினத்தந்தி 1 Jan 2022 2:51 PM GMT (Updated: 1 Jan 2022 2:51 PM GMT)

இந்தியா, பாகிஸ்தான் இடையே 1988-ம் ஆண்டு, டிசம்பர் 31-ந் தேதி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

புதுடெல்லி,

இந்தியா, பாகிஸ்தான் இடையே 1988-ம் ஆண்டு, டிசம்பர் 31-ந் தேதி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான அணுசக்தி நிறுவனங்கள் மீதான தாக்குதல்களை தடை செய்வதற்கானது. இந்த ஒப்பந்தப்படி ஒவ்வொரு ஆண்டும் இரு நாடுகளும் ஜனவரி 1-ந் தேதியன்று பரஸ்பரம் தத்தமது அணுசக்தி நிறுவனங்களின் பட்டியலை பரிமாற்றம் செய்து கொள்ளும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

அந்த வழக்கத்தின்படி இந்த வருடம் 31-வது பட்டியல் பரிமாற்றம் நடைபெற்றது. இதேபோல, 2008-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி பாகிஸ்தான் - இந்தியா இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தான தூதரக ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளும் தங்கள் நாட்டு காவலில் வைத்துள்ள மற்றொரு நாட்டு கைதிகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி மற்றும் ஜூலை 1-ம் தேதி பரிமாறிக்கொள்ளும்.

இதன்படி,  பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 628 கைதிகள் அந்நாட்டு சிறையில் உள்ளதாகவும், இதில் 51 பொதுமக்களும், 577 மீனவர்களும் அடங்குவர் எனவும் தெரிவித்துள்ளது. அதேபோன்று இந்தியாவில் உள்ள 355 பாகிஸ்தானிய கைதிகளில் 282 பொதுமக்களும், 73 மீனவர்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கைதிகளை விரைவில் விடுவிக்க வேண்டும் என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story