23 ஆண்டுகளுக்கு பின் முடிவுக்கு வந்த ஏழுமலையான் கோவில் வழக்கு


23 ஆண்டுகளுக்கு பின் முடிவுக்கு வந்த ஏழுமலையான் கோவில் வழக்கு
x
தினத்தந்தி 3 Jan 2022 10:35 PM GMT (Updated: 3 Jan 2022 10:35 PM GMT)

23 ஆண்டுகள் நடந்த வழக்கில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கே 3,402 ஏக்கர் நிலம் சொந்தம் என கோர்ட்டு தீர்ப்பு வந்துள்ளது.



திருப்பதி,

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பக்தர், மன்னர் மற்றும் பேரரசர்கள் என பலர் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப நிலமாகவும், பணமாகவும், நகைகளையும் சொத்துகளாக எழுதி வைத்துள்ளனர்.

இதுபோன்று, திருப்பதியில் பல இடங்களில் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக சொத்துக்கள் உள்ளன.  அதில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், வேத பல்கலைக்கழகம், கால்நடை பல்கலைக்கழகம், பத்மாவதி விருந்தினர் மாளிகை, தேவஸ்தான செயல் அலுவலர், இணை செயல் அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக 3,402 ஏக்கர் நிலம் உள்ளது.

இவை அனைத்தும் தங்களுக்கே சொந்தம் என திருப்பதியை சேர்ந்த கங்காராம் மடத்தின் பீடாதிபதியாக இருந்த ஓம்கார் தாஸ் வழக்கு தொடர்ந்தார். கடந்த 1998ம் ஆண்டு தொடர்ந்த இவ்வழக்கு இனாம் துணை தாசில்தார் நீதிமன்றத்தில் 23 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், உரிமை பத்திரம் 2,539ன்படி கங்காரம் மடம் தொடர்ந்த வழக்கில், தொடர்புடைய சொத்துகள் அனைத்தும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கே சொந்தமானது என்று தீர்ப்பளித்தது. பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்த இவ்வழக்கில் இனாம் தாசில்தார் நீதிமன்றத்தில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகள் தேவஸ்தானத்திற்கு சொந்தமானது என தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.  இதனை வழக்கறிஞர் மதுசூதன் தெரிவித்துள்ளார்.




Next Story