கச்சா எண்ணெய் விலை குறைவு: எரிபொருள் விலையை குறைக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்


கச்சா எண்ணெய் விலை குறைவு: எரிபொருள் விலையை குறைக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Jan 2022 11:15 AM GMT (Updated: 5 Jan 2022 11:15 AM GMT)

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாகவும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறைக்கு இருந்து வருகிறது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

மத்திய அரசு கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் தேதி, பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் குறைத்து அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கட்டுக்குள் இருந்து வருகிறது.  கடந்த 62 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஒரே விலையில் நீடிக்கிறது. 

இந்த நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாகவும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்தி தனது டுவிட்டரில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார். 

தனது டுவிட் பதிவில், சர்வதேச சந்தையில் ஒரு கேலன் கச்சா எண்ணெய் 7.3 டாலர் குறைந்துள்ளதாக வெளியான தகவலை சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும், எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைத்தால் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 8 குறையும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், எரிபொருள் கொள்ளை என இந்தியில் ஹேஷ்டேக்கும் பதிவிட்டுள்ளார். 

Next Story